செய்திகள்

தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 4,600 பத்திரப்பதிவுகள்

சென்னை, ஜூன் 8–

ஊரடங்கில் தளர்வு ஏற்படுத்திய நிலையில் தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 4,600 பத்திரப்பதிவுகள் நடைபெற்றன.

தமிழகத்தில் 2 வாரங்களுக்கு பிறகு கொரோனா ஊரடங்கில் நேற்று முதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள் 30 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பத்திரப்பதிவு அலுவலகங்கள் நேற்று முதல் மீண்டும் சுறுசுறுப்புடன் செயல்படத் தொடங்கி உள்ளன.

கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்கள் உள்பட தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் பத்திரப் பதிவு அலுவலகங்கள் நேற்று செயல்பட்டன. 50 சதவீதம் அளவுக்கு டோக்கன் வழங்கப்பட்டு பத்திரப்பதிவு நடைபெற்றது.

28,750 டோக்கன்

தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 4,600 பத்திரப்பதிவுகள் நடைபெற்றன. மாநிலம் முழுவதும் உள்ள 575 பத்திரப்பதிவு அலுவலகங்களில் 28,750 டோக்கன்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தன. பத்திரப்பதிவு அலுவலகங்களில் நேற்று காலையில் போதிய அளவு கூட்டம் இல்லை. ஆனால் மாலைக்குள் 4,600 பத்திரப்பதிவுகள் முடிந்துள்ளன.

கொரோனா பரவல் காரணமாக பத்திரப்பதிவுக்கு வந்திருந்த பொதுமக்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து டோக்கன் வாங்கி காத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *