செய்திகள்

தமிழகம் முழுவதும் குரூப்–4 தேர்வை 18½ லட்சம் பேர் எழுதினார்கள்

சென்னை, ஜூலை.25-

தமிழகம் முழுவதும் 7 ஆயிரத்து 689 தேர்வு மையங்களில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்–4 தேர்வு நேற்று நடந்தது. இந்த தேர்வை 18½ லட்சம் பேர் எழுதினார்கள். 3½ லட்சம் பேர் எழுதவில்லை.

397 கிராம நிர்வாக அலுவலர், 2 ஆயிரத்து 792 இளநிலை உதவியாளர், 34 வரித்தண்டலர், 509 நில அளவையர், 74 வரைவாளர், 1,901 தட்டச்சர், 784 சுருக்கெழுத்து தட்டச்சர் உள்பட டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 பதவிகளில் வரும் 7 ஆயிரத்து 301 பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.

இதற்கு தமிழகம் முழுவதும் இருந்து 22 லட்சத்து 2 ஆயிரத்து 942 பேர் விண்ணப்பித்து இருந்தனர். கடந்த 2012-ம் ஆண்டு முதல் தற்போது வரை குரூப்–4 பதவிகளுக்கு அறிவிக்கப்பட்ட காலிப் பணியிடங்களில் விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கையில் ஒப்பிடும்போது இதுதான் அதிகபட்சமாக இருந்து இருக்கிறது.

குரூப்–4 பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும் 7 ஆயிரத்து 689 தேர்வு மையங்களில் நேற்று நடந்தது. அதிகபட்சமாக சென்னையில் 503 தேர்வு மையங்களில் தேர்வர்கள் தேர்வை எழுதினர். காலை 9.30 மணிக்கு தொடங்கிய இந்த தேர்வு பிற்பகல் 12.30 மணியுடன் முடிவடைந்தது.

22 லட்சத்து 2 ஆயிரத்து 942 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்த நிலையில், 18 லட்சத்து 50 ஆயிரத்து 471 பேர் மட்டுமே தேர்வை எழுதினர். அதாவது 3 லட்சத்து 52 ஆயிரத்து 471 பேர் தேர்வு எழுத வரவில்லை. அதாவது 84 சதவீதம் பேர்தான் இந்த தேர்வை எழுதியதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் ஒரு பணியிடத்துக்கு 253 பேர் வரை போட்டியிடுகின்றனர்.

இந்த தேர்வின் முடிவு வருகிற அக்டோபர் மாதத்தில் வெளியாக வாய்ப்பு இருக்கிறது. அதனைத்தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பும் அதே மாதத்தில் நடத்தப்பட்டு, நவம்பர் மாதத்துக்குள் கலந்தாய்வும் நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published.