திருச்சி கலெக்டர், எஸ்.பி. நள்ளிரவில் மோட்டார் சைக்கிளில் சென்று சோதனை
சென்னை, ஜூன் 22–
தமிழகம் முழுவதும் கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை குடித்து உயரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று காலை பலி எண்ணிக்கை 54-ஆக உயர்ந்துள்ளது. 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாகியது.
இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்கால சமுதாயத்தை பாதிக்கும் போதைப்பொருள் விற்பனையை தடுக்க முழு வீச்சில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவை அடுத்து தமிழகம் முழுவதும் கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடலூர்
அதன்படி, கடலுார் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் விற்பனை தடுக்கும் பொருட்டு, மாவட்டம் முழுவதும் அதிரடிசோதனை நடத்த போலீசாருக்கு, எஸ்.பி., ராஜாராம் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, மதுவிலக்கு அமல்பிரிவு டி.எஸ்.பி., சவுமியா மேற்பார்வையில் கடலுார், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாதோப்பு, பண்ருட்டி,திட்டக்குடி ஆகிய 7 சப் டிவிஷன்களில் அதிரடி மதுவிலக்கு சோதனையில்போலீசார் ஈடுபட்டனர். மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்கள் போலீசார் நடத்திய சோதனையில், 119 பேர் மீது வழக்கு பதிந்து, 23 பேரை கைது செய்துள்ளனர். மொத்தம் 205 லிட்டர் சாராயம், புதுச்சேரி மாநில 143 மதுபாட்டில்கள், 523 டாஸ்மாக் மதுபாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக கள்ளச்சாராய வேட்டையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு (கலால்) டிஎஸ்பி ரமேஷ்ராஜ் தலைமையில், மாவட்டம் முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், அந்தந்த பகுதிகளில் சம்மந்தப்பட்ட சப் டிவிஷன் டிஎஸ்பிக்கள் தலைமையில், தனிப்படைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக நடந்த அதிரடி சோதனையில், 16 பெண்கள் உள்பட மொத்தம் 37 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 680 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவித்துள்ளனர். மேலும், ஜவ்வாதுமலை பகுதியில் நடந்த சோதனையில், பேரல்களில் பதுக்கி வைத்திருந்த சுமார் 1300 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் கைப்பற்றப்பட்டுள்ளது. அதோடு, கள்ளச்சாராய விற்பனையில் தொடர்ந்து ஈடுபடுவோரை கண்காணிக்கும் பணி நடந்து வருகிறது.
தஞ்சாவூர்
தஞ்சை மாவட்ட மதுவிலக்கு டிஎஸ்பி முருகதாசன் உத்தரவின் பெயரில், பட்டுக்கோட்டை மதுவிலக்கு ஆய்வாளர் ஜெயா தலைமையில் போலீசார் பட்டுக்கோட்டை அருகே அத்திவெட்டி, தம்பிக்கோட்டை, மேலக்காடு, வடகாடு மற்றும் சின்னாத்தங்காடு உள்ளிட்ட பகுதிகளில் அதிரடியாக ஆய்வில் ஈடுபட்டனர்.
இந்த ஆய்வின் ஒரு பகுதியாக பட்டுக்கோட்டை அருகே உள்ள தம்பிக்கோட்டை மற்றும் சின்னத்தங்காடு பகுதியில் 5 பேரல்களில் 150 லிட்டர் ஊரல் சாராயம் அதாவது கள்ளச்சாராயம் தயாரிப்பதற்கு முந்தைய படிநிலையில் மூலப் பொருள்கள் கலந்த கலவையான ஊரல் சாராயம் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது. இந்த சாராய உற்பத்தியில் ஈடுபட்ட சின்னாத்தங்காடு பகுதியைச் சேர்ந்த நாகராஜ் (78) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.நள்ளிரவில் மோட்டார்
சைக்கிளில் சென்ற கலெக்டர்
திருச்சிராப்பள்ளி துறையூர் வட்டம் பச்சைமலை அருகில் உள்ள நெசக்குளம் பகுதியில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக கிடைத்த தகவலின் பேரில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் நேற்றிரவு பச்சை மலைப் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அங்கு இருந்த 250 லிட்டர் கள்ளச்சாராயத்தை கீழே ஊற்றி அழித்தனர். அதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்களை அழைத்து கள்ளச்சாரயத்தின் தீமைகளை எடுத்து கூறியதை தொடர்ந்து அக்கிராமத்தைச் சேர்ந்த அனைவரும் மாவட்ட ஆட்சியர் முன்பாக மது போதைக்கு எதிராக இனி ஒருபோதும் எங்கள் கிராமத்தில் கள்ளச்சாராய உற்பத்தி நடக்காது அதனை அனுமதிக்க மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்வில் ஏராளமான காவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக மூன்று கிலோமீட்டர் தூரம் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், எஸ் பி வருண்குமார் இருவரும் இரு சக்கர வாகனத்தில் சென்று சாராய ஊறலை அழித்தது குறிப்பிடத்தக்கது.
இது போல் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதியில் காவல்துறையினர், மாவட்ட நிர்வாகத்தினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
#விஷ சாராயம் #கள்ளக்குறிச்சி