சென்னை, நவ.2
ஆண்டுதோறும் நவம்பர் 2–ம் தேதி கிறிஸ்துவ மக்களால் கல்லறை திருவிழா கொண்டாடப்படுகிறது.
கிறிஸ்துவர்களின் தியானத்தை போற்றும் வகையிலும் அவர்களை வழிபடும் வகையில் கல்லறை திருநாள் ஆண்டு தோறும் விமர்சையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் கல்லறை திருவிழா தமிழகத்தில் உள்ள பல்வேறு மயானங்களில் களை கட்டியது.
இந்த தினத்தில் முன்னோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கவும், தங்களின் குடும்பம் மற்றும் வாரிசுகள் நலமுடன் நோய் நொடி இல்லாமல் வாழ வேண்டும் என முன்னோர்கள் ஆசி பெற வேண்டியும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. மேலும் குழந்தை ஏசு பேராலயத்தில் சிறப்பு வழிபாடுகளும் ஆராதனைகளும் நடைபெற்றது.
நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒரே சமயத்தில் கல்லறைகளுக்கு மலர்கள் தூவி வழிபட்டனர்.
விழுப்புரம்
விழுப்புரத்தில் கல்லறை திருவிழாவை முன்னிட்டு கிறிஸ்துவர்கள் முன்னோர்களை நினைவு கூர்ந்தனர்.
கிறிஸ்துவ மக்களின் முன்னோர்களை நினைவு கூறும் வகையில், நடைபெறும் இந்நிகழ்வில் கிறிஸ்துவ குடும்பங்களில் உயிரிழந்த முன்னோர்கள், பெரியவர்கள், உடன் பிறந்தோர், அவர்களின் நினைவிடங்களுக்குச் சென்று அஞ்சலி செலுத்தி பிரார்த்திக்கும் வகையில் இந்தக் கல்லறை திருவிழாவை அனுசரிக்கின்றனர்.
அந்த வகையில், விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோட்டில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் கிறிஸ்துவ மக்கள் திரண்டு, முன்னோர்களின் நினைவிடங்களில் மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏற்றியும் பிரார்த்தனை செய்தனர். அவர்கள் ஆன்மா சாந்தி அடையும் வகையில் நினைவு கூர்ந்தனர். இதனால் கல்லறைகள் பூக்களால், மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. கிறிஸ்துவ பாதிரியார்கள் பிரார்த்தனை மேற்கொண்டனர். ஏராளமான கிறிஸ்துவ மக்கள் இதில் கலந்து கொண்டனர்.