9 நாட்களில் 2,428 போலி மதுபாட்டில்கள் பறிமுதல்: 14 பேர் கைது
சென்னை, செப். 12–
தமிழகம் முழுவதும் அமலாக்கப்பிரிவு போலீசார் 9 நாட்கள் நடத்திய அதிரடி சோதனையில் 2,428 போலி மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு 14 பேர் கைது செய்யப்பட்டனர்.
கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்துக்குப் பின்னர் தமிழகம் முழுவதும் போலீசார் தீவிரமாக கண்காணித்து போலி மதுபான விற்பனையை கண்டறிந்து அவற்றை பறிமுதல் செய்து கடும் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். டிஜிபி சங்கர்ஜிவால் உத்தரவின் பேரில், தமிழக அமலாக்கப்பிரிவு கூடுதல் டிஜிபி அமல்ராஜ் நேரடி மேற்பார்வையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதன் விளைவாக கும்பகோணத்தில் கடந்த மாதம் போலி மதுபான ஆலை கண்டறிந்து முடக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக கடந்த 3ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை அமலாக்கப்பிரிவு காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனை நடத்தினர். இதில் ஏராளமான போலி மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கடந்த 3 ஆம் தேதியன்று திருச்சி விமான நிலையம் பகுதியைச் சேர்ந்த முருகன் (எ) முருகவேல் என்ற வரலாற்றுப்பதிவேடு ரவுடியிடமிருந்து திருச்சி மண்டல மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் ராமன் தலைமையிலான தனிப்படையினர் 644 (750 மிலி) போலி மதுபானபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் 5ஆம் தேதியன்று விருதுநகர் -அருப்புகோட்டை ரோடு, பெரியவள்ளிகுளம், லட்சுமிபதி நகரில் வீரராஜ் என்பவரது வீட்டை சோதனை செய்ததில் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 264 (750 மிலி) போலி மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டது. திருநெல்வேலி மாநகரம், வண்ணாரபேட்டை, கம்பராமாயணம் தெருவில் உள்ள வீட்டை சோதனை செய்ததில் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,026 (750 மிலி) போலி மதுபானபாட்டில்கள் சிக்கின விசாரணையில் கோவாவில் குடியேறிய தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தை சேர்ந்த மாரிராஜன் என்பவர் கர்நாடக மாநிலத்திலிருந்து போலி மதுபானபாட்டில்களை ஏற்பாடு செய்தவர் என்று தெரியவந்தது. அதன் பேரில் அமலாக்கப்பிரிவு போலீசார் பெங்களூரைச் சேர்ந்த கேசவமூர்த்தி (50) என்பவரை கைது செய்தனர்.
இதே போல கிருஷ்ணகிரி, திண்டுக்கல், சங்கரன்கோவில், மார்த்தாண்டம் ஆகிய பகுதிகளில் போலி மதுபாட்டில்களை விற்பனை செய்து வந்த முனியப்பன், முருகன், ஷேக் அப்துல்லா, சங்கரன்கோயில், செல்வராஜ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதில் முக்கிய குற்றவாளியான மாரிராஜன் என்பவரை மத்திய நுண்ணறிவு பிரிவு, திருச்சி மண்டல தனிப்படை குழுவினர் கோவா மாநிலத்தில் பிடித்து, திருச்சி மாநகர மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் ஒப்படைத்தனர். மாரிராஜன் என்பவரை விசாரனை செய்த பின்னர் 10.09.2024 அன்று சிறையில் அடைத்தனர்.
இந்த வகையில் கடந்த 9 நாட்களில் அமலாக்கப்பிரிவு போலீசார் நடத்திய அதிரடி நடவடிக்கையில் மொத்தம் 2,428 போலி மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு 14 பேர் கைது செய்யப்பட்டனர். அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்ட கூடுதல் டிஜிபி அமல்ராஜ் மேற்பார்வையில், ஐஜி மயில்வாகனன், எஸ்பி சியாமளா தேவி தலைமையிலான தனிப்படையினர் இன்ஸ்பெக்டர்கள் ராமன், இளங்கோ, சரவணகுமார் ஆகியோரை டிஜிபி சங்கர்ஜிவால் வெகுவாக பாராட்டினார்.