போஸ்டர் செய்தி

தமிழகம், புதுச்சேரியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று பிற்பகலில் தொடங்கியது

சென்னை, மார்ச் 14–

பத்தாம் வகுப்புக்கான பொதுத் தேர்வு இன்று தொடங்கியது.

தமிழகம், புதுச்சேரியில் 9 லட்சத்து 97 ஆயிரத்து 794 மாணவ-மாணவிகள் தேர்வை முதல்முறையாக பிற்பகலில் எழுதினார்கள்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் +2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கியது. +1 வகுப்புகளுக்கான தேர்வு 6–ந்தேதி துவங்கி நடைபெற்று வருகிறது.

இதனையடுத்து 10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கி 29-ம் தேதி வரை நடைபெறுகிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள 3,731 தேர்வு மையங்களில் இருந்து 9 லட்சத்து 97 ஆயிரத்து 794 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள்.

தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிப்பாடங்களுக்கான தேர்வுகள் மதியம் 2 முதல் மாலை 4.45 மணி வரை நடைபெறுகிறது.

கணிதம், அறிவியல், வரலாறு பாடத்திற்கான தேர்வுகள் காலையில் நடைபெறுகிறது.

மொழிப் பாடம் முதல் தாள் தேர்வு இன்று நடைபெற்றது. தேர்வு எழுத சென்ற மாணவ, மாணவிகள் தேர்வு அறைக்குள் செல்லும் முன் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் வகுப்பு ஆசிரியர்களிடம் வாழ்த்து பெற்று சென்றனர். மாணவர்களுக்கு பள்ளி ஆசிரியர்கள் ஆலோசனைகளை வழங்கினார்கள். அவர்கள் தேர்வை சிறப்பாக எழுத பள்ளிகளில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

தீவிர சோதனைக்கு பிறகே மாணவ–மாணவிகள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

முதல் முறையாக தேர்வு பிற்பகல் 2 மணிக்கு தொடங்கியது. மாணவர்களின் புகைப்படம், பதிவெண், பாடம் முதலான விவரங்கள் அச்சிடப்பட்ட முகப்பு சீட்டுகள் முதன்மை விடைத்தாளுடன் இணைத்து வழங்கப்பட்டன. முதல் 10 நிமிடங்கள் வினாத்தாளைப் படித்துப் பார்ப்பதற்கும், அடுத்த 5 நிமிடங்கள் விடைத்தாளில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை சரிபார்ப்பதற்கும் வழங்கப்பட்டன. சரியாக 2.15 மணிக்கு தேர்வு தொடங்கியது. பகல் 4.45 மணிக்கு முடிவடைகிறது.

தேர்வு மையங்களில் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. தேர்வறைகளில் துண்டுத் தாள்களைப் பார்த்து எழுத முயற்சி செய்வது, பிற மாணவர்களின் விடைத்தாள்களைப் பார்த்து காப்பியடிப்பது உள்ளிட்ட ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதற்கு உடந்தையாக இருக்கும் பள்ளி நிர்வாகத்தினர் மீதான நடவடிக்கையும் கடுமையாக இருக்கும் என்று தேர்வுத்துறை எச்சரித்திருந்தது.

தேர்வு மையங்களை கண்காணிக்க 5500 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்சியர் தலைமையில் தேர்வுக்குழு ஏற்படுத்தப்பட்டிருந்தது. குழுவில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அதிகாரி, சார்-ஆட்சியர், கோட்டாட்சியர் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் கல்வித்துறை அதிகாரிகளுடன் இணைந்து தேர்வு மையங்களில் திடீர் ஆய்வு செய்து வருகின்றனர்.

* * *

புதுவையில் 18 ஆயிரம் மாணவமாணவிகள் தேர்வு எழுதினர்

புதுவையில் 18 ஆயிரம் மாணவமாணவிகள் 10 வகுப்பு தேர்வு எழுதினர்.

புதுவையில் 15 ஆயிரத்து164 பேரும் காரைக்காலில் 2939 பேரும் இன்று மொழித்தாள் – 1 தேர்வு எழுதினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *