செய்திகள்

தமிழகம் இந்தியாவுக்கு ‘லீடர்’: ஸ்டாலின் பேச்சு

Makkal Kural Official

சென்னை, ஜூன் 10–

முதலமைச்சர் ஸ்டாலின் இன்று சென்னை, தரமணியில் உலக வங்கியின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள நவீன உலகளாவிய வணிக மையத்தை திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் இந்தியாவிற்கே தமிழகம் ‘லீடர்’ என்ற இடத்தை அடைந்திருக்கிறது. தமிழ்நாடு ‘மாடல் மாநிலம்’ என்று பெருமிதத்துடன் கூறினார்.

கடந்த 2001-ம் ஆண்டு 70 அலுவலர்களைக் கொண்ட ஒரு சிறிய குழுவுடன் நிறுவப்பட்ட சென்னை உலகளாவிய வணிக மையம் விரிவாக்கப்பட்ட போது செப்டம்பர் 2006-ல் தரமணியில் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது. தற்போது மார்ச் 2025-ன்படி 1,500-க்கும் மேற்பட்ட பணியாளர்களோடு, உலகளவில் 130-க்கும் மேற்பட்ட உலக வங்கி அலுவலகங்களின் மூலம், 189 உறுப்பு நாடுகளுக்குச் சேவை செய்யும் ஒரு முக்கிய உலகளாவிய மையமாக வளர்ந்துள்ளது. தீவிரமான உலகளாவிய தேடலுக்குப் பிறகு, சென்னை மையம் உலக வங்கிக் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. உலகளாவிய வணிக மையத்தை திறந்து வைத்து முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது:–

உலக வங்கியுடன் நம்முடைய Partnership 1971-ம் ஆண்டு தமிழ்நாடு விவசாயக் கடன் திட்டத்தில் தொடங்கியது. அப்போது இருந்து, தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பு, சுகாதாரம், கல்வி, பேரிடர் மேலாண்மை, நகர்ப்புற வளர்ச்சி போன்ற பலதரப்பட்ட துறைகளில் உலக வங்கி நமக்கு உறுதுணையாக இருந்து வருகிறது.

2022ம் ஆண்டில், புதுடெல்லிக்கு வெளியே தன்னுடைய முதல் மண்டல அலுவலகத்தை உலக வங்கி சென்னையில்தான் அமைத்தார்கள்.

உலக வங்கியுடனான நம்முடைய இந்த நீண்ட நெடிய உறவு பல்வேறு துறைகளில் பல நற்பலன்களை வழங்கியிருக்கிறது.

இந்தியாவுக்கே லீடர்

1980ம் ஆண்டு மற்றும் 1990ம் ஆண்டு முதல் இரண்டு கட்டங்களில் ‘தமிழ்நாடு ஊட்டச்சத்து திட்டம்’ மற்றும் 2004ம் ஆண்டிலும் 2010ம் ஆண்டிலும் செயல்பாட்டில் இருந்த தமிழ்நாடு சுகாதார அமைப்புகள் திட்டம். இந்த இரண்டும் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலன்களில் முன்னேற்றம் காண சிறந்த முன்னெடுப்பாக அமைந்தது. இன்றைக்கு தமிழ்நாடு இந்தத் துறைகளில் இந்தியாவிற்கே லீடர் என்று சொல்லக்கூடிய இடத்தை அடைந்திருக்கிறது. சுய உதவிக் குழுக்களை ஊக்கப்படுத்தி பெண்களின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்தியிருக்கிறது. பெண்கள் தலைமையேற்று நடத்தக்கூடிய 8 ஆயிரத்து 400 நிறுவனங்களுக்கு 2022ம் ஆண்டிலிருந்து 2025ம் ஆண்டு பிப்ரவரி வரை 267 கோடி ரூபாய்க்கு இந்தத் திட்டம் மூலம் கடன்கள் வழங்கப்பட்டிருக்கிறது. ஊரகப் பகுதிகளில், 1 லட்சம் பேர் புதிய தொழில்கள் தொடங்கவும், 53 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் இந்தத் திட்டம் சாதனை படைத்திருக்கிறது.

அதேபோன்று, பணிபுரியும் பெண்களுக்காக தமிழ்நாடு முழுவதும் நாம் தொடங்கி வரும் தோழி விடுதிகள் திட்டத்திலும் உலக வங்கியின் பங்கு இருக்கிறது. கூடிய விரைவில் சென்னையில் தாழ்தள எலெக்ட்ரிக் பேருந்துகள் இயங்கப்போகிறது. அதற்கான திட்டத்திலும் உலக வங்கி நமக்காக உதவியிருக்கிறார்கள்.

நகரமயமாக்கல்

இந்தியாவிலேயே அதிகமாக நகரமயமாக்கல் நடைபெறும் மாநிலம் தமிழ்நாடுதான். 2030ம் ஆண்டுக்குள் 63 விழுக்காடு தமிழ்நாடு மக்கள் நகர்ப்புறங்களில்தான் வசிப்பார்கள்.

காலநிலை மாற்றத்திற்கு ஏற்ற, சுற்றுச்சூழலுக்கு உகந்த குடியிருப்புகளை ஏழை மக்களுக்கு உருவாக்கித் தருவதற்காக நம்முடைய அரசின் நகர்ப்புற வீட்டுவசதி திட்டத்திற்கு ’டெவலப்மண்ட் பாலிசி லோன்’ என்ற வகையில் 190 மில்லியன் டாலரை உலக வங்கி கடனாக வழங்கியிருக்கிறார்கள்.

மொத்தம், 1.12 பில்லியன் டாலர் அளவுக்கு உலக வங்கியின் கடனுதவியில், தமிழ்நாடு கிராமப்புற புதுவாழ்வுத் திட்டம், ஒன்றிய அரசின் விருதைப் பெற்ற தமிழ்நாடு நவீன பாசன வேளாண்மைத் திட்டம் உட்பட ஏழு திட்டங்கள் தமிழ்நாட்டில் நடைமுறையில் இருக்கிறது.

401 மில்லியன் டாலர் திட்டம்

வருங்காலத்தில், உலக வங்கி உதவியுடன் 409.79 மில்லியன் டாலர் மதிப்பிலான முக்கியமான சில திட்டங்களை தமிழ்நாட்டில் செயல்படுத்தப் போகிறோம்.

முதலாவதாக, தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு திட்டம், கடந்த ஆண்டு ஜூன் மாதம் துணை முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது.

ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைய வேண்டும் என்றால் அது பெண்களின் பங்களிப்பு இல்லாமல் முடியவே முடியாது. தமிழ்நாட்டுப் பொருளாதாரத்தின் முதுகெலும்பே பெண்கள்தான். விவசாயம் அல்லாத, வளர்ந்து வரும் துறைகளில் பெண் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கத்துடன், அடுத்த 5 ஆண்டுகளில் ஆயிரத்து 185 கோடி ரூபாய் மதிப்பீட்டில், உலக வங்கி உதவியுடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இரண்டாவதாக, தமிழ்நாடு – கடல் வளங்கள் மற்றும் நீலப் பொருளாதாரத்தை நிலையான முறையில் பயன்படுத்துதல் திட்டம்.

மூன்றாவதாக, தமிழ்நாடு கிராமப்புற புதுவாழ்வுத் திட்டத்தின் இரண்டாம் கட்டம்.

உலக வங்கியுடன் சேர்ந்து இப்படி இன்னும் பல திட்டங்களை செயல்படுத்தி, தமிழ்நாட்டு மக்களின் தேவைகளை நிறைவேற்ற என்னுடைய அரசு ஆர்வமாக இருக்கிறது. அதற்கு நம்முடைய Partnership தொடர வேண்டும்.

இந்தியாவின் வளர்ச்சி

என்ஜின் தமிழகம்

9.69 விழுக்காடு பொருளாதார வளர்ச்சியுடன் இந்தியாவின் வளர்ச்சி இஞ்சினாக தமிழ்நாடுதான் இருக்கிறது. இந்த ஆண்டு தமிழ்நாட்டின் GSDP 36 லட்சத்து 56 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.

2030ல் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்று ஒரு பெரிய இலக்குடன் தமிழ்நாடு பயணிப்பது என்பது உங்களுக்கெல்லாம் தெரிந்திருக்கும். அந்த இலக்கை அடைவதில் உலக வங்கியுடனான நம்முடைய உறவு வெறும் கடனுதவி சார்ந்தது மட்டுமல்ல. Technology, Policy Making மற்றும் Knowledge சார்ந்த ஒரு Partnership-ஆக தான் இதை நான் பார்க்கிறேன்.

குறிப்பாக, காலநிலை மாற்றம் சார்ந்த நடவடிக்கைகள், SDG இலக்குகள், மகளிருக்கான அதிகாரம் வழங்குதல் ஆகிய இலக்குகளை எட்டுவதில் உலக வங்கியின் உதவி இன்றியமையாதது.

நம்முடைய Target-ஐ Reach செய்வதில் இருக்கும் சில சவால்களையும் நாம் யோசிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

குறிப்பாக வளர்ச்சி கடன்களுக்கான வட்டி விகிதம் ஆண்டுக்கு 6 முதல் 7 விழுக்காடு என்று அதிக அளவில் இருக்கிறது. வரும் காலங்களில், புதுமையான மாற்றுதலுக்குரிய கடனுதவியை வழங்கி, மக்களுக்கு தேவையான சமூக – பொருளாதார மேம்பாட்டு தேவைகளுக்கான முதலீடுகளுக்கு உலக வங்கி உதவும் என்று எதிர்பார்க்கிறோம்.

மாடல் மாநிலம்

நீண்ட கால இலக்குகளை எட்டுவதில், ஒரு மாடல் மாநிலமாக ஆக தமிழ்நாட்டை உருவாக்க உலக வங்கியுடன் தமிழ்நாடு அரசு தொடர்ந்து இணைந்து செயல்படும்.

நம்முடைய இந்தப் பயணம் புதுமை, சமூக பொருளாதார சமநிலை மற்றும் நிலையான வளர்ச்சி என்கிற இலக்கில் நிச்சயம் வெற்றியடையும். அதற்கு தொடர்ந்து உங்களுடைய ஆதரவு வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழச்சி தங்கபாண்டியன், டாக்டர் கனிமொழி சோமு, சட்டமன்ற உறுப்பினர் அசன் மௌலானா, ஒன்றிய அரசின் கேபினட் செயலாளர் டி.வி. சோமநாதன், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், உலக வங்கியின் மேலாண்மை இயக்குநர் வென்காய் ஜாங், உலக வங்கியின் இந்தியாவிற்கான இயக்குநர் அகஸ்டே டானோ கோமே, சென்னை மையத் தலைவர் சுனில் குமார், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை முதன்மைச் செயலாளர் பிரஜேந்திர நவ்நீத், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை செயலாளர் வி. அருண்ராய், உலக வங்கியின் உயர் அலுவலர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *