செய்திகள் நாடும் நடப்பும்

தமிழகமெங்கும் வீடுகள் அதிகரிக்க முதல்வர் ஸ்டாலினின் மாஸ்டர் பிளான்


நாடும் நடப்பும் – ஆர்.முத்துக்குமார்


தமிழகமெங்கும் இருக்கும் ஒரு பெரிய சிக்கல் – குடியிருக்க வீடுகள் தேவையான எண்ணிக்கையில் இல்லை என்பதாகும்.

சமீபத்தில் வெளிவந்த ஒரு ஆய்வு அறிக்கை சுட்டிக்காட்டுவது :– கடந்த ஆறு ஆண்டுகளில் 6 லட்சம் வீடுகள் கட்ட அனுமதி பெறப்பட்டது . அதில் 3 லட்சம் வீடுகள் மட்டுமே கட்டப்பட்டு இருக்கிறது.

நிலம் வாங்கி வீடு கட்டுபவருக்கு அது நல்ல முதலீடு என்று இருந்தாலும் அனுமதிகள் வாங்க பல்வேறு அரசு துறை அலுவலகங்களுக்கு அலைய வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

மேலும் பழைய வீட்டை இடிக்கப் போகும் பலருக்கு அக்கம்பக்க வீடுகள் பெரிய சவாலாகவும் இருக்கும். இவற்றை எல்லாம் கடந்து ஒரு வழியாக ஒருவர் தனக்கென சொந்த வீட்டைக் கட்டி குடியிருக்கச் செல்லும் நாளில் கைவசம் பணம் இருப்பு மிகக் குறைவாகவே இருக்கும்.

அப்படிப்பட்ட நிலையை புரிந்து கொண்டு பலர் வீடு கட்டிக் குடியேறும் எண்ணத்தை மாற்றிக்கொண்டு அடுக்குமாடி பிளாட் வீடுகளில் ஒன்றை வாங்கி வைத்துக்கொண்டு நிம்மதியாக வாழ நினைக்கிறார்கள்.

இந்த நிலை நல்ல முறையில் தொடர தமிழக அரசு உதவி செய்ய முன்வந்தால் திருவல்லிக்கேணி, மயிலை, தண்டையார்பட்டை போன்ற நெரிசல்மிகு வீடுகள் கொண்ட பகுதிகளில் வசதியான அடுக்குமாடி வீடுகள் வந்துவிடும்; குடியிருப்பு குறைபாடுகளை நீக்கி விடும்.

இந்த சிந்தனையுடன் தமிழக முதல்வர் ஸ்டாலினும் அமைச்சர்களுடன் பேசி புது திட்டவரைவை வெளியிட இருக்கிறார் என்று வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி ஓரு நிகழ்வில் கூறியிருக்கிறார்.

தமிழகத்தில் தற்போது 750 சதுரமீட்டருக்கு கீழ் உள்ள கட்டிடங்களுக்கு 3 சமையலறை வரை பணிமுடிப்பு சான்றிதழ் தேவையில்லை எனும் நடைமுறையை மாற்றி 8 சமையலறை வரை சான்றிதழ் தேவையில்லை என்பதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சு.முத்துசாமி தெரிவித்தார்.

கிரெடாய் தமிழகத் தலைவர் ஆர்.இளங்கோ, கிரெடாய் தேசிய துணைத் தலைவர் ஸ்ரீதர் ஆகியோர் கட்டிட அனுமதி, நிலமாற்றம், மறுவரையறை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேசினர். தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு பேசும்போது “திட்ட அனுமதிக்கு ஒற்றைச்சாளர அனுமதி திட்டம் கொண்டு வருவது குறித்து சிஎம்டிஏ ஆய்வு செய்யும் விண்ணப்பத்துடன் உரிய காலத்தில் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் தாமதம் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் வருங்காலங்களில் அனுமதியை இரட்டிப்பாக்கும் முயற்சியை எடுப்போம்’’ என்றார்.

இதையடுத்து அமைச்சர் சு.முத்துசாமி பேசுகையில் கட்டுமானத் துறையினரின் 100-க்கும் மேற்பட்ட கோரிக்கைகளில் 43 கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்து அதில் தற்போது 25 கோரிக்கைகள் மீது உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. சிலவற்றுக்கு சட்டத்திருத்தங்கள் தேவைப்படுவதால் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

ஒற்றைச்சாளர அனுமதி திட்டம் தொடர்பாக முதல்வர் உத்தரவின்பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனுமதியளிக்கும் கட்டிடத்துக்கான உயரத்தை 12-ல் இருந்து 14 மீட்டராக்கும் கோரிக்கை தொடர்பாக விரைவில் அறிவிப்பு வர இருக்கிறது. தளப்பரப்பு குறியீடு என்பது 2.25 மற்றும் 3.25 ஆகியவற்றுக்கு இடையில் ஒரு அளவை கொண்டுவருவது குறித்து ஆய்வு செய்யப்படும்.

சுயசான்று அளிக்கும் திட்டத்தில் பிரச்சினை ஏதும் இல்லை. ஆனால் இப்போது எத்தனை அனுமதி பெறப்பட்டது. அதில் விதிமீறல் இல்லாதது எவ்வளவு என்பது குறித்தும் கண்காணிக்க வேண்டியுள்ளது. விதிமீறல் குறைந்தால் அந்த திட்டத்துக்கு மாறலாம். பொறியாளர்கள், ஆர்க்கிடெக்ட் நிபுணர்கள் பொறுப்பேற்று, அரசுக்கு நம்பிக்கை ஏற்பட்டால் அந்த திட்டத்துக்கு செல்லலாம்.

பணிமுடிப்பு சான்றிதழை பொறுத்தவரை 750 சதுர மீட்டருக்கு கீழ் உள்ள கட்டிடங்களுக்கு 3 சமையலறை வரை சான்றிதழ் தேவையில்லை எனும் நடைமுறை தற்போது உள்ளது. இனி 8 சமையலறை வரை சான்றிதழ் தேவையில்லை என்பதற்கான அனுமதி விரைவில் வெளியாக உள்ளது. மாஸ்டர் பிளானை பொறுத்தவரை 8 தயாரிக்கப்பட்டுள்ளது என்றார்.

இப்படி திட்ட அனுமதிகளுக்கு ஒற்றைச் சாளர அனுமதி வழங்கப்பட்டால் வர்த்தக ரீதியாய் இப்படிப்பட்ட வீடுகள் கட்டுபவர்களுக்கும் சொந்தமாக வீடு கட்டிய பிறகு கையில் காசு இல்லை என்று தவிக்காமல் இருக்க அவரே மூன்று அல்லது நான்கு வீடுகள் கொண்ட பிளாட் வீடுகளை கட்டிக்கொண்டு அதில் வாடகை பெற வசதி ஏற்படுத்திக் கொள்வார்கள்.

மொத்தத்தில் எட்டு சமையல் அறைகள் கொண்ட குடியிருப்பு திட்டங்களுக்கு பணிமுடிப்பு சான்றிதழ் தேவை இல்லை என்ற சிந்தனை விரைவில் சட்ட வடிவமாக வரவேண்டும். சமர்ப்பிக்க இருக்கும் நிதிநிலை அறிக்கையில் இதுசார்ந்த அறிவிப்புகளுக்கு தமிழகம் காத்திருக்கிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *