செய்திகள்

தமிழகத்தை முதன்மை மாநிலமாக திகழச் செய்தவர் முதல்வர் எடப்பாடி : அமைச்சர் பாஸ்கரன் புகழாரம்

சிவகங்கை, பிப்.18–

சிவகங்கை மாவட்டம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் துவக்கப்பட்ட திருமண நிதியுதவித் திட்டத்தில் 2,230 பயனாளிகளுக்கு தலா 8 கிராம் தங்கம் திருமண நிதியுதவி என ரூ.17 1/4 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் அனைத்துத் திட்டங்களையும் வழங்கி முதன்மை மாநிலமாக திகழச் செய்தவர் தமிழ்நாடு முதலமைச்சர் என கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் புகழாரம் சூட்டினார்.

சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் சமூகநலத்துறையின் மூலம் படித்த ஏழைப் பெண்களுக்கான திருமண நிதி உதவி மற்றும் திருமாங்கல்யத்திற்கான 8 கிராம் தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ப.மதுசூதன் ரெட்டி தலைமை வகித்தார்.

மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.நாகராஜன் முன்னிலை வகித்தார். கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் படித்த ஏழைப் பெண்களுக்கான திருமண நிதி உதவி மற்றும் திருமாங்கல்யத்திற்கான தலா 8 கிராம் தங்கம் வழங்கி பேசுகையில்,

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதலமைச்சராக பொறுப்பேற்ற காலம் முதல் ஏழைகளின் முன்னேற்றத்திற்கு எண்ணற்ற திட்டங்களை அறிவித்து அதனை செயல்படுத்தினார்கள். அதிலும் விவசாயிகள் மற்றும் வறுமையிலுள்ள குடும்பங்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு தனிக்கவனம் எடுத்து பல்வேறு திட்டங்களை வழங்கி உள்ளார்கள். அத்திட்டத்தின் உன்னதமான திட்டமான ஏழைப் பெண்களுக்கான திருமண நிதி உதவி மற்றும் திருமாங்கல்யத்திற்கான தங்கம் வழங்கும் திட்டமாகும்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின்படி, சிறப்பாக ஆட்சி செய்து வரும் தமிழ்நாடு முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கருவறை முதல் வாழ்நாள் இறுதி வரை ஒவ்வொருவரும் சிறப்பாக வாழ்ந்திட வேண்டும் என்ற நோக்குடன் பல்வேறு திட்டங்கள் வகுத்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் இத்திட்டத்தில் பயன்பெறும் பெண்கள் பட்டப்படிப்பு வரை பயன்பெற வேண்டும் என்று ஊக்கப்படுத்தும் வகையிலேயே ரூ.25,000/- மற்றும் ரூ.50,000/- என திருமண நிதியுதவி பிரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. காரணம் அனைவரும் முழுமையாக திட்டம் பெற மேற்படிப்பு படிக்க வேண்டும் என்பது அரசின் நோக்கம். அதற்கு பெற்றோர்களும் முழுஒத்துழைப்பு கொடுத்து தங்கள் பிள்ளைகளை மேற்படிப்பு வரை படிக்க வைக்க வேண்டும்.

அதாவது ஒரு பெண் கல்வியறிவை பெறும் போது அவரது குடும்பமே கல்வி பெறும் என்ற சீரிய கருத்தினை மனதில் கொண்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பெண் குழந்தைகளை படிக்க வைத்து திருமணம் செய்யும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஏழைப் பெண்களின் பெற்றோர்களுக்கு உதவும் பொருட்டு இத்திட்டம் செயல்பட்டு வருகிறது.

மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் கொரோனா வைரஸ் பாதிப்பு காலத்தில் மக்கள் சிரமப்படுவதை கருத்திற்கொண்டு பல்வேறு திட்டங்களை வழங்கியதுடன் பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாட குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2,500 மற்றும் பொங்கல் பரிசு தொகுப்புக்களை வழங்கினார்.

சிவகங்கை மாவட்ட மக்களின் குடிநீர் தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்யும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் ரூ.1752 3/4 கோடி மதிப்பீட்டில் புதிய குடிநீர் திட்டப்பணிகளை கானொலிக் காட்சியின் மூலம் துவக்கி வைத்து இப்பகுதி மக்களின் நீண்டநாள் கனவை நினைவாக்கி உள்ளார்கள் மற்றும் விவசாயிகளின் கஷ்டங்களை உணர்ந்து தற்பொழுது கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்துள்ளார். இதுபோல் அவ்வப்போது பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளை உணர்ந்து அரசு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

சமூகநலத் துறையின் சார்பாக பெண் சிசுவதையினை தடுக்கும் பொருட்டு பெண் குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்த்து கல்வியறிவூட்டி திருமணம் செய்யும் பெற்றோர்களை கௌரவப்படுத்தும் விதமாக 5 விதமான திருமண நிதியுதவித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.

மூவலூர் இராமாமிர்தம் நினைவு திருமண நிதியுதவி, டாக்டர்.முத்துலெட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண நிதியுதவி, அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதியுதவி, ஈ.வெ.ரா.மணியம்மையார் நினைவு ஏழை விதவை மகள் திருமண நிதியுதவி, டாக்டர்.தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவி ஆகியத் திட்டங்களின் அடிப்படையில், இன்று பட்டம் படித்த 1,325 பயனாளிகளுக்கு ரூ.50,000 வீதம் ரூ.6 1/2 கோடி மதிப்பில் திருமண நிதியுதவியும் 10-ஆம் வகுப்பு படித்த 905 பயனாளிகளுக்கு ரூ.25,000 வீதம் ரூ.2 1/4 கோடி மதிப்பில் திருமண நிதியுதவியும் ஆக மொத்தம் ரூ.9 கோடி- அவரவர் வங்கிக்கணக்கில் மின்னனு பரிமாற்றம் மூலம் வரவு வைக்கப்பட்டுள்ளது. 2,230 பயனாளிகளுக்கு தலா 8 கிராம் தங்கம் வீதம் 17,840 கிராம் தங்கம் ரூ.8 1/2 கோடி மதிப்பீட்டிலும் என ஆக மொத்தம் தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதியுதவியாக ரூ.17 1/4 கோடி மதிப்பீட்டில் வழங்ககப்பட்டுள்ளது.

இதைப்பெற்றுச் செல்லும் பயனாளிகள் ஒரு தாய் தன் பிள்ளைக்கு சீதனமாக வழங்கும் பொருளாக நினைத்து இன்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தாயாக இருந்து அவர்கள் அறிவித்த திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கி வருவதற்கு என்றென்றும் நன்றியுள்ளவர்களாக இருந்திட வேண்டுமென கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் சிவகங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிஆர்.செந்தில்நாதன், மாவட்ட சமூகநல அலுவலர் இந்திரா, மாவட்ட சமூகநல கண்காணிப்பு அலுவலர் பாலா, ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்கள் மஞ்சுளாபாலசந்தர் (சிவகங்கை), பிர்லா கணேசன் (தேவகோட்டை), ஊராட்சி ஒன்றியத் துணைத் தலைவர் கேசவன், கூட்டுறவு வங்கித் தலைவர்கள் கருணாகரன், சசிக்குமார், பாரதிதாசன், கோபி, தமிழ்செல்வன், மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *