தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்ட சென்னை ஐகோர்ட்
டிஜிபி, கலெக்டர் பதிலளிக்க உத்தரவு
சென்னை, ஜூலை 1–
தமிழகத்தை உலுக்கிய கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகள் தொடர்பாக சென்னை ஐகோர்ட் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
கள்ளக்குறிச்சியில், ஜூன் 18-ம் தேதி கள்ளச்சாராயம் குடித்து 65 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே அதிரவைத்தது. இதையடுத்து மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த 21 பேரை சிபிசிஐடி போலீஸார் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களில், கண்ணு குட்டி என்கின்ற கோவிந்தராஜ், விஜயா, சின்னதுரை, ஜோசப் என்கின்ற ராஜா, மடுகரை மாதேஷ், சிவக்குமார், பன்சில்லால், கவுதம்சந்த், கதிரவன், கண்ணன் மற்றும் சக்திவேல் ஆகிய 11 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிபிசிஐடி போலீசார் கள்ளக்குறிச்சி மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நீதிபதி ஸ்ரீராம் முன்னிலையில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.
கள்ளக்குறிச்சியை ஒட்டியுள்ள கல்வராயன் மலையில் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு, அங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு விற்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி விசாரித்து வருகிறது. கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணம் தொடர்பான வழக்கின் விசாரணையை சிபிஐ அல்லது சிறப்புப் புலனாய்வு குழுவுக்கு மாற்றக் கோரி அண்ணா திமுக வழக்கறிஞர்கள் அணி மாநிலச் செயலாளர் ஐ.எஸ்.இன்பதுரை மற்றும் பாமக செய்தித் தொடர்பாளரும், வழக்கறிஞர்கள் சமூக நீதிப்பேரவை தலைவருமான வழக்கறிஞர் கே.பாலு ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு 3–ந் தேதி விசாரணை வர உள்ளது.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக சென்னை ஐகோர்ட் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. கல்வராயன் மலை பகுதி மக்களின் பொருளாதார சமூக மேம்பாட்டுக்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தாமாக முன் வந்து இந்த வழக்கை வழக்கு விசாரணைக்கு எடுத்துள்ளது.
தலைமைச் செயலாளர், மத்திய, மாநில பழங்குடியினர் நலத்துறை, டிஜிபி எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து டிஜிபி மற்றும் மாவட்ட கலெக்டர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.