சென்னை, மார்ச்.23-–
தமிழகத்துக்கு 39 தேர்தல் பொது பார்வையாளர்கள், 20 போலீஸ் பார்வையாளர்கள் 26-ந் தேதி வருகிறார்கள் என்று தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு சத்யபிரத சாகு நேற்று அளித்த பேட்டி வருமாறு:-
தேர்தல் விதி மீறல் தொடர்பாக ‘சி விஜில்’ செயலி மூலம் இதுவரை 864 புகார்கள் வீடியோ ஆதாரங்களுடன் பெறப்பட்டு உள்ளன.
நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னமும், த.மா.கா.வுக்கு சைக்கிள் சின்னமும், பா.ம.க.வுக்கு மாம்பழம் சின்னமும் தேர்தல் கமிஷன் ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது. ம.தி.மு.க. மற்றும் புதிய தமிழகம் கட்சிகளுக்கு தனி சின்னம் கேட்டு அனுப்பப்பட்ட மனுக்களுக்கு இதுவரை தேர்தல் கமிஷனிடம் இருந்து பதில் வரவில்லை. வேட்புமனு தாக்கல் செய்வதற்கு 27-ந் தேதி கடைசி நாளாகும். வேட்புமனுக்கள் பரிசீலனையின்போது வேட்பாளர் களுக்கு சின்னம் இருக்க வேண்டும். அதை தேர்தல் கமிஷன்தான் முடிவு செய்யும்.
தேர்தலை அமைதியாகவும், நியாயமாகவும் நடத்தி முடிப்பதற்காக தொகுதிக்கு ஒருவர் வீதம் 39 பொதுப்பார்வையாளர்கள் மற்றும் 2 தொகுதிக்கு ஒருவர் வீதம் 20 போலீஸ் பார்வையாளர்களை தேர்தல் கமிஷன் அனுப்பி வைக்கிறது. இவர்கள் அனைவரும் 26-ந் தேதி தமிழகம் வருகின்றனர்.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு வரும் பார்வையாளர்கள் அவர்களது ஆன்லைன் டிக்கெட்டுகளை காட்டினால், அரசு பஸ்களில் போட்டி நடைபெறும் இடம் வரை இலவசமாக பயணிக்கலாம் என்ற தகவலை கூறுகிறீர்கள். அமைச்சர் பொன்முடி பதவியேற்பு விஷயத்தில் தேர்தல் கமிஷன் தலையிடுமே என்றும் கேட்கிறீர்கள்.
ஆனால் எதிலும் நாங்கள் நேரடியாக தலையிட முடியாது. யாராவது புகார் அளித்து, அதில் நியாயம் இருந்தால் அதுபற்றிய அறிக்கை தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைக்கப்படும். தேர்தல் கமிஷன் அதுகுறித்து விசாரித்து உரிய முடிவை அறிவிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.