புதுடெல்லி, மார்ச்.12-
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 38-வது கூட்டம் டெல்லியில் உள்ள காவிரி மேலாண்மை ஆணைய அலுவலகத்தில் ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் 4 மாநிலங்களையும் சேர்ந்த அதிகாரிகள் நேரிலும், காணொலியிலும் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு அரசு சார்பில் நீர்வளத்துறை செயலாளர் மங்கத்ராம் சர்மா, காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் காணொலியில் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நீர் தரவுகள் சேகரிப்பைத் தொடர்ந்து, நீர் பங்கீடு பற்றி விவாதிக்கப்பட்டது. அப்போது எதிர்வரும் மாதங்களில் தமிழகத்துக்கான தண்ணீரை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி வழங்க கர்நாடகத்துக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக அதிகாரிகள் வலியுறுத்தினர்.
பின்னர் ஆணைய தலைவர் அதிகாரிகளுடனான ஆலோசனைக்கு பிறகு, மார்ச் முதல் மே மாதம் வரை தமிழகத்துக்கு மாதம் தலா 2.5 டி.எம்.சி. வீதம் 7.5 டி.எம்.சி. தண்ணீரை காவிரியில் திறந்து விட வேண்டும் என கர்நாடகத்துக்கு உத்தரவிட்டனர்.