சென்னை, அக். 22–
தமிழகத்தில் இரண்டு ‘அம்ரித் பாரத்’ ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
‘வந்தே பாரத்’ ரயில்களுக்கு இணையாக, ஏ.சி., இல்லாத முன்பதிவு பெட்டிகள் மற்றும் பொதுப் பெட்டிகளுடன் கூடிய ‘அம்ரித் பாரத்’ ரயில்கள் இயக்கம் கடந்த ஜனவரி மாதம் துவங்கியது. நடப்பாண்டு இறுதிக்குள் நாடு முழுதும், 26 ‘அம்ரித் பாரத்’ ரயில்கள் இயக்கத்துக்கு கொண்டு வரப்பட உள்ளன. திருநெல்வேலி -– ஷாலிமர், தாம்பரம் -– சந்திரகாசி என இரு வழித்தடங்களில் இந்த ரயில்கள் இயங்க உள்ளன.
திருநெல்வேலியில் இருந்து இயக்கப்படும் ரயிலால், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, விழுப்புரம் ஆகிய நகரங்களுக்கும் இந்த ரயில் சேவை கிடைக்க பெறும். சென்னையில் இருந்து வடமாநிலங்கள் பயணிப்போருக்கு சந்திரகாசி ரயில் பயனுள்ளதாக இருக்கும்.
அம்ரித் பாரத் ரயில்கள், 12 முன்பதிவு, எட்டு முன்பதிவில்லா பொது பெட்டி, மாற்றுத்திறனாளிகள் பெட்டி உட்பட, 22 பெட்டிகளை கொண்டதாக இருக்கும். அனைத்து பெட்டிகளிலும் கண்காணிப்பு கேமரா, விசாலமான இருக்கை வசதி, அடுத்து வரும் ரயில் நிலையத்தை அறிவிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.
‘ஜீரோ டிஸ்சார்ஜ்’ மாடுலர் கழிப்பறை, அதிநவீன வசதி கொண்ட இணைப்பு மற்றும் ரயில் பெட்டிகள் என்பதால், ரயில் இயக்கம் மென்மையாக உணரப்படும். ‘புஷ்-புல்’ தொழில்நுட்பம் என்பதால், இருபுற இன்ஜின்கள் மூலம் ரயில், 130 கி.மீ., வேகத்தில் இயங்கும்.