சென்னை, ஜன.28-–
தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய ரூ.1,635 கோடியை உடனே விடுவிக்க வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் வலியுறுத்தினார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழகம் முன்னோடியாக இருந்து வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 85 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த 1 கோடியே 9 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர்.
அதில் 86 சதவீத வேலைவாய்ப்பு பெண் தொழிலாளர்களுக்கும், 29 சதவீதம் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின குடும்பங்களுக்கும் வழங்கப்படுகிறது. மேலும், ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 27-ந் தேதி முதல் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது. எனவே ஊதியத்திற்கான நிதியினை உடனடியாக விடுவிக்க கோரி கடந்த 13-ந் தேதி கடிதம் மூலம் பிரதமர் மோடியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். ஆனால் தொகை விடுவிக்கப்படவில்லை.
இந்த நிலையில், டெல்லியில் மத்திய நிதி நிர்மலா சீதாராமனை, தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, கனிமொழி எம்.பி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை கூடுதல் தலைமை செயலாளர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் சந்தித்து கடிதம் ஒன்றை வழங்கினர். அதில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் கடந்த நவம்பர் மாதம் 27-ந் தேதி முதல் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதிய நிலுவை தொகையான ரூ.1,635 கோடியினை உடனடியாக விடுவிக்க வேண்டும். மேலும் அவர்கள் 2024-25-ம் ஆண்டிற்கு கூடுதல் மனித சக்தி நாட்களுக்கு ஒப்புதல் வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் இந்த திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்திட தொடர்ந்து ஆதரவு வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.இந்த சந்திப்பின்போது மத்திய நிதி அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் எஸ்.எஸ்.யாதவ் உடன் இருந்தார்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் வேளாண்மை, உழவர் நலத்துறை மந்திரி சிவராஜ் சவுகானையும் அமைச்சர் தங்கம் தென்னரசு சந்தித்து கடிதம் கொடுத்தார்.