செய்திகள்

தமிழகத்துக்கு தேவையான நிதியை விடுவிக்க பிரதமர் மோடியிடம் மு.க.ஸ்டாலின் கோரிக்கை

Makkal Kural Official

புதுடெல்லி, மே.25-

டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்துக்கு பின்னர் பிரதமர் மோடியை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். அப்போது தமிழகத்துக்கு தேவை யான அனைத்து நிதிகளையும் விடுவிக்க கோரிக்கை விடுத்தார்.

நிதி ஆயோக் கூட்டத்தின் இடையே பிரதமர் மோடியை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனியாக சந்தித்து பேசினார். அப்போது அவர் தமிழகத்துக்கு தேவையான நிதியை விடுவிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை பிரதமரிடம் முன்வைத்தார்.

மாலையில் நிதி ஆயோக் கூட்டம் முடிந்த பின்னர், சென்னைக்கு திரும்பும் வேளையில் டெல்லி விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கு என்னென்ன செய்ய வேண்டும். என்னென்ன பாக்கி இருக்கிறது என்பதை பட்டியலிட்டு பேசி இருக்கிறேன். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் பள்ளி கல்வித்துறைக்கு சேர வேண்டிய நிதியை தர வேண்டும். கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்கள், அங்குள்ள விமான நிலையங்களை விரிவாக்கம் செய்ய வேண்டும்.

கோவையில் எய்ம்ஸ்…

சென்னையில் பறக்கும் ரெயில் சேவையை மெட்ரோ நிர்வாகத்துடன் ஒப்படைக்க வேண்டும். செங்கல்பட்டு, திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையை 8 வழிச்சாலையாக மாற்ற வேண்டும்.

கோவையில் ‘எய்ம்ஸ்’ ஆஸ்பத்திரி அமைக்க வேண்டும். ஆதி திராவிடர்கள், பழங்குடியின மக்களின் மாண்பை நிலை நிறுத்த கூடிய வகையில் அவர்கள் சாதி பெயர்கள் விதிகளை மாற்ற வேண்டும்.

கிறிஸ்தவர்களாக மாறிய ஆதி திராவிடர் மக்களை ஆதி திராவிடர் பட்டியலில் சேர்க்க வேண்டும். இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை மீட்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை நான் பேசி இருக்கிறேன்.

நிதி ஆயோக் கூட்டம் முடிந்த வுடன் பிரதமரை சந்திக்க நேரம் கேட்டிருந்தேன். அங்கேயே அவரை 5 நிமிடம் சந்திப்பதற்கு நேரம் கிடைத்தது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி இந்த கோரிக்கைகளை மீண்டும் வலியுறுத்தி, வற்புறுத்தி எடுத்து சொல்லி இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

நம்பிக்கையோடு இருப்போம்

பின்னர், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-–

கேள்வி:- நீங்கள் விடுத்துள்ள கோரிக்கைகள் குறித்து பிரதமர் என்ன சொன்னார்?

பதில்:- செய்ய மாட்டேன் என்றா சொல்லப் போகிறார். செய்கிறாரா? இல்லையா? என்பதை போக, போக பார்ப்போம்.

கேள்வி: தொடர்ச்சியாக நீங்கள் கோரிக்கைகள் வைத்துக்கொண்டே வருகிறீர்கள். சட்டப்போராட்டமும் நடத்துகிறீர்கள். உங்கள் கோரிக்கை களை இப்போது நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறதா?

பதில்:- ஏற்கனவே மெட்ரோ ரெயில் பணிக்காக சேர வேண்டிய நிதியை நிறுத்தி வைத்திருந்தார்கள். அந்த கோரிக்கையை வலியுறுத்தி சொன்ன போது, அதனை உடனே செய்து கொடுத்தார். அதனை நினைவுப்படுத்தி நன்றி சொன்ன போது, நீங்கள் சொன்னீர்கள் நான் செய்தேன் என்று மோடி சொன்னார். அதேபோல் இப்போதும் இதனை செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு வந்துள்ளேன்.

கேள்வி:- தமிழகத்துக்கான கல்விக்கான நிதி கிடைக்குமா?

பதில்:- நம்பிக்கையோடு இருப்போம்.

கேள்வி:- அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்:- இது நியாயமான கருத்துதான். நீதிபதி நியாயமான தீர்ப்பை வழங்கியுள்ளார்.

அரசியல் ரீதியான குற்றச்சாட்டு

கேள்வி:- அமலாக்கத்துறை பல மாநிலங்களில் சோதனைகள் நடத்தி குற்றச்சாட்டுகளை கூறி உள்ளது. தற்போது தமிழக அரசு மீதும் அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ளதே…

பதில்:- இது அரசியல் ரீதியாக செய்வது. இதை எப்படி சந்திக்க வேண்டுமோ, அப்படி சந்திப்போம்.

கேள்வி:- உங்கள் டெல்லி பயணத்தை எதிர்கட்சி தலைவர் விமர்சித்து உள்ளாரே?

பதில்:- நான் வெள்ளைக்கொடி காட்ட போகிறேன் என்று எடப்பாடி பழனிசாமி சொன்னார். என்னிடம் வெள்ளைக்கொடியும் இல்லை. அவரிடம் இருக்கும் காவிக்கொடியும் என்னிடம் இல்லை.

கேள்வி:- டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை சொல்கிறது. மணல் குவாரியிலும் ரூ.5 ஆயிரம் கோடி ஊழல் நடந்திருப்பதாக சொல்லியுள்ளார்களே?

பதில்:- அது எல்லாம் பித்தலாட்டம். பொய் பிரசாரம் செய்கிறார்கள். அந்தந்த துறை அமைச்சர்கள் அவ்வப்போது மறுத்து வருகிறார்கள். இருந்தாலும் திட்டமிட்டு இதை செய்கிறார்கள். தேர்தல் நெருங்க, நெருங்க இன்னும் அதிகம் செய்வார்கள். அதனை சந்திக்க தயாராக இருக்கிறோம்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *