செய்திகள்

தமிழகத்துக்கு துரோகம் செய்த தி.மு.க.வை ஓட ஓட விரட்டியடிப்போம்

கோவை, மே.17–
தமிழகத்துக்கு துரோகம் மட்டுமே செய்த தி.மு.க.வை ஓட ஓட விரட்டியடிப்போம் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.
சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அண்ணா தி.மு.க வேட்பாளர் வி.பி.கந்தசாமியை ஆதரித்து கோவை புறநகர் மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோர் இருகூர், பள்ளபாளையம், நீலம்பூர், சூலூர் ஆகிய இடங்களில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர்.
பிரச்சாரத்தின்போது அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கோவைக்கு வந்தபோது கோவை மாவட்டத்திற்கு தி.மு.க. கொண்டு வந்த திட்டங்களை கூறி ஓட்டு கேட்க முடியவில்லை. பொய்யான வாக்குறுதிகளையும், கழக அரசு மீது அவதூறையும் கூறி பிரசாரம் செய்தார். தமிழகத்திற்கு துரோகம் மட்டுமே செய்து, பொய் பிரச்சாரம் செய்து வரும் தி.மு.க.வை இத் தேர்தலில் படுதோல்வி அடைய செய்யுங்கள். அம்மா வின் பாதையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையிலான கழக ஆட்சியில் 50 ஆண்டுகளாக கண்டிராத வளர்ச்சித் திட்டங்களை கோவை மாவட்டம் பெற்று சிறந்து விளங்குகிறது.
சாதனைகள்
சூலூர் சட்டமன்றத் தொகுதி யில் ரூ.30 கோடி மதிப்பில் காங்கயம்பாளையம் முதல் சிந்தாமணிபுதூர் வரை 4 வழிச்சாலை பணிகள், சூலூரில் புதிய பேருந்து நிலையம், சோமனூர் பஸ் நிலையம் புதிய பள்ளி கட்டடங்கள், வட்டார போக்குவரத்து அலுவலக கட்டட பணிகள், சூலூர் ஒன்றியத்துக்குட்பட்ட பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் தார்சாலை அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. மேலும் சூலூரில் போக்குவரத்து கழக பணிமனை, மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், புதிய தீயணைப்பு நிலையம், சூலூரில் வட்டாட்சியர் அலுவலக கட்டடமும் அமைக்கப்பட்டுள்ளது.
அரசு கல்லூரி, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. சுல்தான்பேட்டை காவல் நிலையம் அமைக்கவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மறைந்த சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் இத்தொகுதிக்கு மக்கள் நலத்திட்டங்களை கொண்டு வருவதற்கு அயராது பாடுபட்டார்.
அவருடன் கழகப்பணிகளிலும், மக்கள் நலத் திட்டங்கள் நிறைவேறவும் துணை நின்றவர் கழக வேட்பாளர் வி.பி.கந்தசாமி. இத்தொகுதிக்கு தேவையான திட்டங்கள் நிறைவேறவும், மத்திய, மாநில அரசுகளின் மக்கள் திட்டங்களும், வளர்ச்சித் திட்டங்களும் தொடர்ந்து செயல்படவும் கழக வேட்பாளர் வி.பி.கந்தசாமிக்கு இரட்டை இலைச் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள்.
இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.
பிரசாரத்தின் போது மாநகர் மாவட்ட கழக செயலாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் எம்.எல்.ஏ., சூலூர் ஒன்றிய கழகச் செயலாளர் மாதப்பூர் பாலு, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் தோப்பு க.அசோகன் மற்றும் பேரூராட்சி கழக செயலாளர்கள் இருகூர் எம்.கே.எம்.ஆனந்த் குமார், பள்ளபாளையம் வி.கே.சண்முகம், சூலூர் கார்த்திகைவேலன், நீலம்பூர் ஊராட்சி கழக செயலாளர் ஆனந்தகுமார் உள்ளிட்ட பலர் உடன் சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *