தென்சென்னை – தமிழிசை, நீலகிரி – எல்.முருகன், கோவை – அண்ணாமலை
சென்னை, மார்ச் 22–
தமிழகத்தில் பா.ஜனதா கட்சி போட்டியிடும் 9 தொகுதிகளுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை கட்சித்தலைமை அறிவித்துள்ளது. இதில் கோவையில் அண்ணாமலை போட்டியிடுகிறார். தென்சென்னையில் தமிழிசை சவுந்தரராஜனும், நீலகிரியில் மத்திய மந்திரி எல்.முருகனும், கன்னியாகுமரியில் பொன்.ராதாகிருஷ்ணனும் களம் காண்கிறார்கள்.
தமிழகத்தை பொறுத்தவரை நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு முதல் கட்டத்திலேயே (ஏப்ரல் 19-ந்தேதி) நடைபெறுகிறது. தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி மற்றும் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி என்று 3 அணிகளும், நாம் தமிழர் கட்சி தனித்தும் களம் காண்கின்றன. எனவே 4 முனை போட்டி என்பது உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் பா.ஜ.க. 19 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பா.ம.க. 10 தொகுதிகளிலும், த.மா.கா. 3 தொகுதிகளிலும், அ.ம.மு.க. 2 தொகுதிகளிலும், இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி, இந்திய மக்கள் கல்விக் கழகம், ஜான்பாண்டியனின் தமிழக மக்கள் கழகம் ஆகிய கட்சிகள் தலா ஒரு தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
இதையடுத்து தமிழகத்தில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலுடன் அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் டெல்லி புறப்பட்டு சென்றனர்.
இந்த நிலையில் இந்தியா முழுமைக்குமான 3-வது கட்ட பாரதீய ஜனதா வேட்பாளர் பட்டியலை கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் நேற்று மாலை வெளியிட்டார். இதில் தமிழகத்தில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் 7 வேட்பாளர்கள் மற்றும் தாமரை சின்னத்தில் போட்டியிடும் 2 கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அடங்கிய முதல் கட்ட பட்டியலை வெளியிட்டது.
1. தென் சென்னை – டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்.
2. மத்திய சென்னை – வினோஜ் பி.செல்வம்.
3. வேலூர் – ஏ.சி.சண்முகம்.
4. கிருஷ்ணகிரி – சி.நரசிம்மன்.
5. நீலகிரி (தனி) – மத்திய அமைச்சர் எல்.முருகன்.
6. கோவை – மாநில தலைவர் அண்ணாமலை.
7. பெரம்பலூர் – பாரிவேந்தர்.
8. நெல்லை – நயினார் நாகேந்திரன்.
9. கன்னியாகுமரி – பொன்.ராதாகிருஷ்ணன்.
அனைவரும் எதிர்பார்த்து இருந்த கோவை தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக மாநில தலைவர் அண்ணாமலை அறிவிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல் தெலுங்கானா மற்றும் புதுவை மாநில கவர்னராக இருந்த டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், திடீரென்று அந்த பதவிகளை ராஜினாமா செய்து, பா.ஜ.க.வில் மீண்டும் சேர்ந்தார். தற்போது அவர் தென்சென்னை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
மத்திய அமைச்சர் எல்.முருகன், சமீபத்தில் மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து நாடாளுமன்ற மேல் சபை எம்.பி.யாக தேர்ந்து எடுக்கப்பட்டார். அவர் தற்போது நீலகிரி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
முதலில் தூத்துக்குடி தொகுதிக்கு தற்போதைய நெல்லை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கும் நயினார் நாகேந்திரன் பெயர் அறிவிக்கப்பட்டது.ஆனால் இந்த பட்டியல் வெளியான சில நிமிடங்களில் அந்த பட்டியலில் திருத்தம் செய்யப்பட்டு நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது.