செய்திகள்

தமிழகத்தில் 867 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று

சென்னை, மார்ச்.17-

தமிழகத்தில் நேற்று 867 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் 5 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 64 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 498 ஆண்கள், 369 பெண்கள் என மொத்தம் 867 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 352 பேரும், செங்கல்பட்டில் 86 பேரும், கோவையில் 81 பேரும், குறைந்தபட்சமாக தூத்துக்குடி, கள்ளக்குறிச்சியில் தலா இருவரும், அரியலூரில் ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தர்மபுரி, பெரம்பலூர், ராமநாதபுரத்தில் புதிதாக பாதிப்பு இல்லை. இந்த பட்டியலில் 12 வயதுக்குட்பட்ட 47 குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 176 முதியவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை 1 கோடியே 80 லட்சத்து 94 ஆயிரத்து 766 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 8 லட்சத்து 61 ஆயிரத்து 429 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று கொரோனாவுக்கு 5 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த வகையில் சென்னையில் 3 பேரும், செங்கல்பட்டு, திருவாரூரில் தலா ஒருவரும் என 3 மாவட்டங்களில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரையில் 12 ஆயிரத்து 556 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 561 பேர் நேற்று குணமடைந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர்.

இதில் அதிகபட்சமாக சென்னையில் 237 பேரும், செங்கல்பட்டில் 59 பேரும், கோவையில் 54 பேரும் அடங்குவர். இதுவரை தமிழகத்தில் 8 லட்சத்து 43 ஆயிரத்து 423 பேர் கொரோனாவில் இருந்து பூரண குணம் அடைந்து உள்ளனர். தற்போது தமிழகத்தில் 5 ஆயிரத்து 450 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *