செய்திகள்

தமிழகத்தில் 7 ஆயிரம் அரசு பள்ளிகளில் டிஜிட்டல் கல்வி முறை விரைவில் அமல்

சென்னை, செப்.12-

தமிழகத்தில் 7 ஆயிரம் அரசு பள்ளிகளில் ‘டிஜிட்டல்’ கல்வி விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். பொதுவாக பள்ளிகளில் ஆசிரியர்கள் பாட புத்தகம் கொண்டு மாணவர்களுக்கு பாடங்களை கற்பிப்பது வழக்கம். அப்படி இல்லாமல் அந்த பாடங்கள் கம்ப்யூட்டர்களில் ஏற்றப்பட்டு ஆசிரியர்கள் கல்வி கற்பிக்கும் முறை (டிஜிட்டல் கல்வி) நாடு முழுவதும் தற்போது பிரபலமாகி வருகிறது. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளிலும் இத்திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

அதன் தொடக்கமாக சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலனி எம்.ஜி.ஆர். தெருவில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அறக்கட்டளை சார்பில் டிஜிட்டல் வகுப்பறை அமைக்கப்பட்டு உள்ளது. அதன் தொடக்கவிழா நேற்று நடைபெற்றது.

அந்த வகுப்பை பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் தொடங்கிவைத்தார். அப்போது அவர் கூறுகையில், “இந்த பள்ளியில் டிஜிட்டல் கல்வி வகுப்பறைக்காக 35 கம்ப்யூட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 7 ஆயிரம் அரசு பள்ளிகளில் டிஜிட்டல் கல்வி முறை விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது” என்றார்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு அறக்கட்டளை தலைவர் எஸ்.ராஜரத்தினம், பள்ளிக் கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன், ராம்கோ குழும தலைவர் பி.ஆர்.வெங்கட்ராமராஜா, டிரைவென்ட் சிஸ்டம்ஸ் நிர்வாக இயக்குனர் இளங்கோ சண்முகம், வெற்றிவேல் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் விஜய் ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு அறக்கட்டளை செயல் இயக்குனர் வசுமதி பென்னி, முதன்மை கல்வி அதிகாரி திருவளர்ச்செல்வி உள்பட பலர் பேசினர்.

தொடக்கத்தில் பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் சேகர் வரவேற்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *