செய்திகள்

தமிழகத்தில் 4 நாட்களில் 2 மடங்கு உயர்ந்த கொரோனா பாதிப்பு

நேற்று 1,594 பேருக்கு தொற்று உறுதி

சென்னை, ஜன.3-

தமிழகத்தில் 1,594 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 4 நாட்களில் 2 மடங்கு பாதிப்பு உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மின்னல் வேகத்தில் உயர்ந்து வரும் நிலையில், கடந்த 29-ந்தேதி 739 ஆக இருந்த தொற்று பாதிப்பு, 4 நாட்களில் சராசரியாக 2 மடங்கு அளவில் உயர்ந்து 1,594 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று புதிதாக 1 லட்சத்து 2 ஆயிரத்து 29 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 954 ஆண்கள், 640 பெண்கள் என மொத்தம் 1,594 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 776 பேரும், செங்கல்பட்டில் 146 பேரும், கோவையில் 80 பேரும், ஈரோட்டில் 33 பேரும், திருப்பூரில் 45 பேரும், சேலத்தில் 29 பேரும், திருவள்ளூரில் 58 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் குறைந்தபட்சமாக புதுக்கோட்டை, பெரம்பலூர், திண்டுக்கல், அரியலூரில் தலா 2 பேரும், மயிலாடுதுறையில் ஒருவரும் உள்பட 15 மாவட்டங்களில் 10-க்கும் குறைவானவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தேனியில் நேற்று ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை. இதில் வெளிநாட்டில் இருந்து வந்த 10 பேருக்கும், வெளிமாநிலங்களில் இருந்து 9 பேருக்கும், 12 வயதுக்குட்பட்ட 84 குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 207 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிக ஆபத்தான மற்றும் அதிக ஆபத்து இல்லாத நாடுகளில் இருந்து இதுவரை தமிழகத்துக்கு 23 ஆயிரத்து 326 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 277 பேருக்கு இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டு, அதில் 195 பேருக்கு ‘எஸ் ஜீன்’ குறைபாடு கண்டறியப்பட்டுள்ளது.

அந்த வகையில் 121 பேருக்கு ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் 92 பேரும், செங்கல்பட்டில் 5 பேரும் உள்பட 13 மாவட்டங்களில் ஒமிக்ரான் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களில் 98 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 20 பேருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் இதுவரை 27 லட்சத்து 51 ஆயிரத்து 128 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 12 வயதுக்கு உட்பட்ட 1 லட்சத்து 5 ஆயிரத்து 706 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 3 லட்சத்து 98 ஆயிரத்து 727 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

கொரோனாவுக்கு தமிழகத்தில் அரசு ஆஸ்பத்திரியில் 4 பேரும், தனியார் ஆஸ்பத்திரியில் 2 பேரும் என 6 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். 33 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை. தமிழகத்தில் இதுவரை மொத்தம் 36 ஆயிரத்து 790 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்து உள்ளனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 624 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக கோவையில் 90 பேரும், சென்னையில் 151 பேரும், செங்கல்பட்டில் 54 பேரும் அடங்குவர். இதுவரையில் 27 லட்சத்து 5 ஆயிரத்து 34 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 9 ஆயிரத்து 304 பேர் உள்ளனர். ஆஸ்பத்திரிகளில் 71 ஆயிரத்து 534 படுக்கைகள் காலியாக உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *