செய்திகள்

தமிழகத்தில் 30,600 ரேஷன் ஊழியர்களுக்கு மருத்துவப் பரிசோதனை, சிகிக்சை முகாம்

தமிழகத்தில் 30,600 ரேஷன் ஊழியர்களுக்கு மருத்துவப் பரிசோதனை, சிகிக்சை முகாம்

அமைச்சர் இரா.காமராஜ் தொடங்கி வைத்தார்

 

திருவாரூர், மே 17–

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பணி புரியும் ஊழியர்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாமை அமைச்சர் இரா. காமராஜ் தொடங்கி வைத்தார்.

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகில் உள்ள குளிக்கரை ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரேஷன் கடைகளில் பணி புரியும் ஊழியர்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாம் துவக்கி விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஆனந்த் தலைமை வகித்தார்.

முகாமினை உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ் தொடங்கி வைத்து பேசியதாவது:

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு இருந்த நிலையிலும் அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்கு விநியோகம் செய்வதற்காக ரேஷன் கடைகள் இயங்கின. மேலும் வைரஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரேஷன் பொருட்கள் வீட்டிற்கே கொண்டு சென்று விநியோகம் செய்யப்பட்டது. இப்பணியினை ரேஷன் ஊழியர்கள் எந்த தயக்கமுமின்றி செய்தனர். ரேஷன் ஊழியர்களின் தன்னலமற்ற பணியினை பாராட்டகின்ற வகையில் தமிழகம் முழுவதும் அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாம் நடத்தப்படுகிறது. இதன் மூலம் தமிழகத்தில் உள்ள 30,600 ரேசன் ஊழியர்களுக்கும் பரிசோதனை செய்யப்படும். பரிசோதனையின் அடிப்படையில் அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சையும் செய்யப்படும்.

தமிழக அரசு நியாயவிலைக்கடை விற்பனையாளர் ஒவ்வொருவருக்கும் ரூ.2500 மற்றும் கட்டுநர்களுக்கு ரூ.2000 ஊக்கத்தொகையாக வழங்கியுள்ளது. விற்பனையாளர்களுக்கு தினப்படியாக நாளொன்றுக்கு ரூ.200 வீதம் ஒவ்வொரு பணி நாளுக்கும் வழங்கி வருகிறது. அரசினால் அறிவிக்கப்பட்டுள்ள அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யும் பணியினை தங்கு தடையின்றி செய்து வரும் பணியாளர்களுக்கு அனைத்து விதங்களிலும் அம்மாவின் அரசு துணையாக இருக்கும்.

திருவாரூர் மாவட்டத்தில் 10 இடங்களில் ரேஷன் ஊழியர்களுக்கு மருத்துவமுகாம் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் ரேசன் கடைகளில் வழங்கப்படும் மே மாதத்திற்கான கூடுதல் அரிசி 81 சதவீதம் வழங்கப்பட்டு விட்டது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமானாலும் நோயின் வீரியம் குறைவாகவே உள்ளது. ஆனாலும் பொதுமக்கள் நோயின் தாக்கத்தில் இருந்து தங்களை தாங்களே தற்காத்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் இரா.காமராஜ் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் சுகாதார துணை இயக்குனர் விஜயகுமார், கூட்டுறவு இணைப்பதிவாளர் ஜெயராமன், ஒன்றிய செயலாளர்கள் சேகர், பாஸ்கர், பேரவை செயலாளர் கலியபெருமாள், கொரடாச்சேரி பேரூர் செயலாளர் செந்தில், குளிக்கரை கூட்டுறவு வங்கி தலைவர் சசிகுமார், துணைத்தலைவர் மலர்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *