செய்திகள்

தமிழகத்தில் 2 நாட்கள் மோடி சுற்றுப்பயணம்: திருப்பூர், நெல்லை பா.ஜ.க. கூட்டத்தில் பேசுகிறார்

Makkal Kural Official

குலசேகரப்பட்டின ராக்கெட் ஏவுதள அடிக்கல் நாட்டுவிழாவில் முதல்வருடன் பங்கேற்கிறார்

சென்னை, பிப்.22–

தமிழகத்தில் பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். குலசேகரப்பட்டினத்தில் இஸ்ரோவின் 2வது ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலினுடன் பங்கேற்கிறார்.

மத்தியில் தொடர்ந்து 2 முறை ஆட்சியை பிடித்துள்ள பாரதீய ஜனதா கட்சி இந்த முறையும் வெற்றி பெற்று சாதனை படைக்க தீவிர களப்பணியில் இறங்கி உள்ளது. வடமாநிலங்களில் வெற்றி பெறுவது மட்டுமல்லாமல் இந்த முறை தென் மாநிலங்களிலும் கணிசமான தொகுதிகளை வென்றுவிட வேண்டும் என திட்டமிட்டு வருகிறது. மேலும் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளை குறி வைத்து புதிய கூட்டணி உருவாக்க திட்டமிட்டு வருகிறது.

இந்த நிலையில் பிரதமர் மோடி தமிழ்நாட்டில் வருகிற 27 மற்றும் 28 ஆகிய 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார்.

பிரதமர் மோடியின் முழு சுற்றுப்பயண விவரம் வருமாறு:-

வருகிற 27ந்தேதி மதியம் 1.30 மணிக்கு பிரதமர் மோடி கேரள மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலமாக கோவை சூலூர் விமானப்படை தளத்திற்கு வருகை தருகிறார்.பின்னர் 2.10 மணிக்கு சூலூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக திருப்பூர் மாவட்டம் பல்லடம் செல்கிறார். பல்லடத்தை அடுத்த மாதப்பூரில், பாரதீய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலையின் என் மண், என் மக்கள் யாத்திரை நிறைவு விழா நடக்கிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று யாத்திரையை நிறைவு செய்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியானது பிற்பகல் 2.45 மணி முதல் 3.45 மணி வரை நடக்கிறது. இந்த நிகழ்ச்சி முடிந்ததும் 3.50 மணிக்கு பிரதமர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் பல்லடம் செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு மாலை 5.05 மணிக்கு மதுரையை சென்றடைகிறார். அங்கு ஒரு தனியார் பள்ளியில் நடக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சி 5.15 மணி முதல் 6.15 மணி வரை 1 மணி நேரம் நடக்கிறது.

இந்த நிகழ்ச்சி முடிந்ததும், பிரதமர் 6.45 மணிக்கு மதுரை திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள தனியார் ஓட்டலுக்கு செல்கிறார். அங்கு தமிழக பா.ஜ.க. மூத்த தலைவர்கள், நிர்வாகிகளை சந்தித்து, பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்கிறார்.

மறுநாள் 28ந் தேதி காலை 8.15 மணிக்கு ஓட்டலில் இருந்து கார் மூலமாக மதுரை விமான நிலையத்திற்கு பிரதமர் செல்கிறார். மதுரையில் இருந்து விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு 9 மணிக்கு தூத்துக்குடியை சென்றடைகிறார். தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக வளாகத்தில் சில திட்ட பணிகளை தொடங்கி வைக்கிறார். திருச்செந்தூர் அருகே குலசேகரபட்டினத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சார்பில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று, ராக்கெட் ஏவுதளம் அமைக்க அடிக்கல் நாட்டுகிறார். மேலும் ராமேசுவரம் புதிய பாம்பன் ரெயில்வே பாலத்தையும் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சிகள் காலை 9.45 மணி முதல் 10.30 மணி வரை நடக்கிறது.

விழா முடிந்ததும் 10.35 மணிக்கு பிரதமர் மோடி தூத்துக்குடியில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக நெல்லைக்கு 11.10 மணிக்கு வருகிறார்.

நெல்லையில் நடைபெறும் பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். இதற்கான ஏற்பாடுகளை பா.ஜ.க.வினர் செய்து வருகின்றனர். காலை 11.15 மணிக்கு தொடங்கும் கூட்டம் 12.15 மணிக்கு நிறைவடைகிறது.

பொதுக்கூட்டத்தை முடித்து கொண்டு பிரதமர் 12.30 மணிக்கு நெல்லையில் இருந்து விமானப்படை ஹெலிகாப்டர் மூலமாக கேரளாவிற்கு செல்கிறார்.பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு கோவை, திருப்பூர், மதுரை, தூத்துக்குடி, நெல்லை ஆகிய 5 மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. பிரதமர் வருகையால் தமிழக பாரதீய ஜனதா கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

வரும் 27, 28ம் தேதிகளில் தமிழகத்தில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். வரும் 27ம் தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் அவர், அன்று இரவு சூலூரில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் தங்குகிறார்.

திருச்செந்தூர் அருகேயுள்ள குலசேகரன்பட்டினத்தில் 2,233 ஏக்கரில் இஸ்ரோ சார்பில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா வரும் 28ம் தேதி காலை 11 மணிக்கு தூத்துக்குடி வஉசி துறைமுக வளாகத்தில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக கோவை சூலூரில் இருந்து இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலமாக தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு பிரதமர் மோடி வருகிறார். அங்கு குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணி, வஉசி துறைமுக விரிவாக்கப் பணி உள்ளிட்ட பணிகளைத் தொடங்கி வைக்கிறார். இந்தநிலையில் பிரதமர் உடன் இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க இருக்கிறார்.

ராக்கெட் ஏவுதளம் தொடர்பாக ஏற்கனவே முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசியிருந்தார் இஸ்ரோ தலைவர் சோம்நாத். குலசேகரன்பட்டினம் பகுதியில் நாட்டின் 2-வது ராக்கெட் ஏவுதளத்தை அமைக்க இஸ்ரோ முடிவு செய்து, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது. இங்கு சுமார் 2,300 ஏக்கர் நிலம் தமிழக அரசு சார்பில் கையகப்படுத்தப்பட்டு இஸ்ரோவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *