சென்னை, டிச. 3–
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
நேற்று காலை வடதமிழக உள் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மாலை காற்றழுத்த தாழ்வு பகுதியாக வடதமிழக மற்றும் தெற்கு கர்நாடக உள் பகுதிகளில் நிலவியது. இது இன்று காலை கடலோர கர்நாடக பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய –கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது.
இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, கோவை, ஈரோடு, கரூர், திருச்சி, பெரம்பலூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை முதல் 9–ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அரபிக்கடல் பகுதிகளில் இன்று கேரள– கர்நாடக கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள், அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 கி.மீ. முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு வருமாறு:–
தோகமலை – 13 செ.மீ., கிருஷ்ணராயபுரம், சோளிங்கூர், திருப்பத்தூர், ஏற்காடு தலா 10 செ.மீ., பஞ்சபட்டி, வாழப்பாடி, சிறுகமணி, சேலம், புலிவலம், விராலிமலை தலா 9 செ.மீ., மாயனூர், முசிறி, ஆர்.கே.பேட், வென்ட் வொர்த் எஸ்டேட், கடவூர் தாலுகா ஆபிஸ், பண்டலூர் தலா 8 செ.மீ., தேவளா, பண்ணையார் அணை, ஓசூர், பணப்பாக்கம், வத்தலை அணைக்கட்டு தலா 7 செ.மீ., பண்ருட்டி, துறையூர், ஆனைமடவு அணை, காவேரிபாக்கம், பார்வுட், சிறுகுடி, ஆத்தூர், சின்னகலார், மேல் கூடலூர் தலா 6 செ.மீ., குளித்தலை, கூடலூர் பஜார், செய்யார், மருங்காபுரி, உளுந்தூர்பேட், பள்ளிபட்டு, அம்முன்டி, ஓமலூர், திம்மம்பட்டி, தர்மபுரி, மங்களாபுரம் தலா 5 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.