சென்னை, மார்ச் 28–
தமிழகத்திற்கு 100 நாள் வேலை திட்ட தினசரி ஊதியத்தை 17 ரூபாயை மத்திய அரசு உயர்த்தியது. இது ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
கிராமப்புற வறுமையை ஒழிப்பதற்காக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை மத்திய அரசு கடந்த 2005ம் ஆண்டு இயற்றியது. இந்த சட்டத்தின் கீழ் பெண்களுக்கு அவர்கள் வசிக்கும் பகுதிக்கு 5 கி.மீ. சுற்றளவுக்குள் 100 நாள் வேலைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கிராமப்புறங்களில் சாலைகள், குளங்கள், குட்டைகள், கிணறுகள் உள்ளிட்ட பொது சொத்துக்களை உருவாக்குவதே இத்திட்டத்தின் பிரதான நோக்கம்.
ஊரக வேலை உறுதித்திட்ட அட்டை வைத்திருப்பவர்கள் வேலை கோரினால் அந்த நபர்களுக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சம் 100 நாள் வேலை அளிக்கப்படும் என்ற உத்தரவாதத்தை இந்த திட்டம் அளிக்கிறது. இத்திட்டத்தின் கீழ் 25.25 கோடி பேர் பதிவு செய்துள்ளனர். இதில் 14.35 கோடி பேர் செயலில் உள்ள தொழிலாளர்களாக உள்ளனர்.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் 100 நாள் வேலை திட்ட ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி 17 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.319 ஆக இருந்த 100 நாள் வேலை திட்ட ஊதியம் தற்போது ரூ.336 ஆக அதிகரித்து வழங்கப்படும் என்றும் வருகிற 1ம் தேதி (ஏப்ரல்) முதல் இந்த ஊதிய உயர்வு நடைமுறைக்கு வரும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக அரியானாவில் ரூ.26 உயர்த்தப்பட்டு ரூ.400ஆக 100 நாள் திட்ட ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு 3,796 கோடி ரூபாய் மத்திய அரசு விடுவிக்காமல் நிறுத்தி வைத்து உள்ளது என தமிழக அரசு குற்றம் சாட்டி இருந்தது. அதுமட்டுமின்றி மத்திய அரசை கண்டித்து தி.மு.க. நாளை ஆர்ப்பாட்டம் அறிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.