போஸ்டர் செய்தி

தமிழகத்தில் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவை: எடப்பாடி பழனிசாமி பேட்டி

Spread the love

கோவை, செப். 12–

இங்கிலாந்தில் உள்ளதுபோல தமிழகத்திலும் ஹெலிகாப்டர் மருத்துவ சேவை செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

கோவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

கேள்வி: சிறுவாணி அணை நீர்மட்டம் உயர்த்த வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்? நீங்கள் கேரளா சென்று முதலமைச்சரை சந்திக்க போகிறீர்களே, இதை வலியுறுத்துவீர்களா?

பதில் : கேரள முதலமைச்சரை சந்திக்கின்றபோது பல்வேறு பிரச்சனைகள் குறித்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றோம். ஆகவே தற்போது பேச முடியாது, போய்விடடு வந்தபின் செய்தியாளர்களிடம் தெரிவிக்கின்றோம்.

கேள்வி: மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தை கேரள அரசு நிறுத்தி வைக்கப்போவதாக தகவல் வெளியாகியிருக்கிறதே, அதை போல ஒரு முடிவை தமிழ்நாடு அரசு எடுக்குமா?

பதில் : மத்திய அரசு, நல்ல திட்டங்களை அறிவித்தால் நாங்கள் ஆதரிப்போம். அதே வேளையில் இன்றைக்கு மோட்டார் வாகன சட்டம் என்பது மிக ஒரு நல்ல சட்டம். சட்டத்தின் வாயிலாக கட்டுப்படுத்த முடியும். நான் வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றபோது இதனையும் ஒரு கருத்தாக பார்த்தோம்.

108 ஆம்புலன்ஸ் சேவை வசதியில் லண்டன் ஆம்புலன்ஸ் சேவை வசதியையும் செயல்படுத்த நாங்கள் ஆலோசனை நடத்தினோம். இன்றைக்கு விபத்துகள் எப்படி நடக்கிறது. போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறபோது விபத்துகள் நடக்கிறது. போக்குவரத்து விதிகளை மீறுகின்றபோதும் விபத்துகள் நடக்கிறது. அரசு என்ன செய்ய வேண்டும். போக்குவரத்து விதிகளை மீறுகின்றவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்தால்தான் விபத்துகளை கட்டுப்படுத்த முடியும். வெளிநாடுகளில் எல்லாம் மூன்று முறை விதிகளை மீறினால் ஆட்டோமேட்டிக்காக லைசென்ஸ் கேன்சல் ஆகிவிடும்.

நாங்கள் அமெரிக்காவிற்கு போகும்போதும் சரி, துபாய், இங்கிலாந்துக்கு போகும்போதும் சரி, இங்கிலாந்தில் டிராபிக்கே கிடையாது, டிராபிக் போலீஸே கிடையாது. எல்லா சிக்னல்களையும் கம்பியூடரைஸ்டு படுத்தியிருக்கிறார்கள். நீங்கள் விதியை மீறினீர்கள் என்றால் ஆட்டோமெட்டிக்காக, உங்கள் வண்டி நம்பர் பதிவாகிவிடும். உடனே அவங்களுக்கு மெமோ போய்விடும். ஆகவே விதிகளை மீறுகின்றபோதுதான் விபத்துகள் நடக்கின்றது. ஆகவே இந்த விபத்துகளை எப்படி தடுக்க முடியும். இதனை தடுப்பதற்கு மத்திய அரசு, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு பரிந்துரை செய்திருக்கிறது. சில அரசுகள் நடவடிக்கை எடுக்கிறது. சில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை. நாங்கள் அதனை பரிசீலித்து எந்தெந்த வகையில் செயல்படுத்த வேண்டுமோ அந்த வகையில் செயல்படுத்துவோம்.

விதிமுறை மீறக்கூடாது

கேள்வி : ஒடிசா மாநிலத்தில் இலவச ஹெல்மெட் கொடுத்து, அபராதத்தையும் விதிக்கிறார்கள், அதுபற்றி…

பதில்: ஏற்கனவே நம்முடைய பகுதியில் உயர்நீதி மன்றத்தின் உத்தரவின் பேரில் அனைவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து பெரும்பாலும் இன்றைக்கு ஹெல்மெட் அணிந்துதான் போய் கொண்டிருக்கிறார்கள். ஒரு சிலர் விதிமுறைகளை மீறுகின்றபோது அவர்களிடத்திலே அபராதம் வசூலிக்கப்படுகின்றது. இன்றைக்கு ஊடகத்தின் வாயிலாக தெரிவிப்பதெல்லாம் வெளிநாடுகளில் பார்த்தீர்கள் என்றால் சர்வ சாதாரணமாக பத்து வழித்தடங்கள். அதேபோல 12 வழித்தடம் இருக்கிறது. 16 வழித்தடங்கள் எல்லாம் இருக்கின்றது. ஆனால் தமிழகத்தில் 8 வழிச்சாலை அமைக்க வேண்டுமென்றால், அதற்கு போராட்டம் நடத்தி நிறுத்துகிறார்கள். இதற்குத்தான் வெளிநாடு செல்ல வேண்டும் என்று சொல்வது.

வெளிநாடுகளில் எப்படியெல்லாம் விதிமுறைகளை பின்பற்றுகிறார்கள், நம் நாட்டில் எப்படி விதிமுறைகளை பின்பற்றுகிறார்கள் என்பதை ஊடகம், பத்திரிகைகள் தெரியப்படுத்த வேண்டும் என்பதை அன்பு வேண்டுகோளாக வைக்கிறேன். நாங்கள் எவ்வளவு செய்தாலும், எதிர்க்கட்சியினர் எங்களுக்கு எதிர்ப்புதான் தெரிவிப்பார்கள். வெளிநாடுகளில் உள்ள நடைமுறைகளை தமிழகத்திலும் பின்பற்றினால் விபத்துகளை குறைக்கலாம், வளர்ச்சிப் பாதையை எட்டலாம்.

உள்கட்டமைப்பு இன்றைக்கு மிக முக்கியம். நாட்டினுடைய வளர்ச்சிக்காக நல்ல சாலை வசதிகளை செய்து கொடுத்திருக்கிறோம். அனைத்து கிராசிங்கிலும் மேம்பாலமாக இருக்கிறது.

ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவை

எதிர்க்கட்சித் தலைவரைப் பொறுத்தவரை ஏற்கனவே சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று கவர்னரிடத்தில் கோரிக்கை வைத்தார்கள். கவர்னரின் உத்தரவின்பேரில், சட்டப் பேரவைத் தலைவரும் பெரும்பான்மையை நீங்கள் நிரூபிக்க வேண்டும் என்று எங்களுக்கு உத்தரவு வழங்கினார். அப்பொழுது சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே நாங்கள் பெரும்பான்மையை நிரூபித்தோம். உடனே ஸ்டாலின் சட்டையைக் கிழித்துக் கொண்டு வெளியே வந்து சாலையில் அமைந்த காட்சி அனைத்து தொலைக்காட்சிகளிலும் வந்தது. அதுபோலத்தான் இப்பொழுதும் நடக்கப் போகிறது. எங்களுடைய முயற்சியைப் பொறுத்தவரைக்கும் கடுமையாக இருக்கும். மற்ற மாநிலங்கள் மட்டுமல்ல, வெளிநாடுகளில் என்ன வசதிகள் இருக்கிறதோ அதேபோல வசதிகளை தமிழ்நாட்டு மக்களுக்கும் செய்து கொடுப்பது எங்களுடைய நோக்கம்.

இங்கிலாந்தில் ஹெலிகாப்டரில் ஆம்புலன்ஸ் சேவை செய்கிறார்கள். அதை சென்று பார்வையிட்டோம். 100, 150 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நோயாளிகளை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல வேண்டுமென்றால் அதிக நேரம் ஆகும், ஒரு அரை மணி நேரத்தில் மருத்துவமனையில் சேர்த்தால் ஒருவர் உயிர் பிழைப்பார் என்று சொன்னால், அவரை அரை மணி நேரத்தில் மருத்துவமனையில் சேர்க்க வேண்டும். அதற்காக ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவையையும் நாங்கள் செயல்படுத்தவிருக்கிறோம். விலை மதிக்கமுடியாத உயிரை காப்பாற்றுவது அரசின் நோக்கம். அந்த அடிப்படையில், இந்த சுற்றுப் பயணத்தின் மூலமாக அனைத்தையும் தெரிந்து கொண்டு வந்திருக்கிறோம்.

கேள்வி: பொருளாதார மந்த நிலை நிலவக்கூடிய நிலையில், முதலீடுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுமா?

பதில்: தமிழகத்தை பொறுத்தவரைக்கும் அந்த நிலை இல்லை. ஏனென்றால் பொருளாதார நெருக்கடி இருக்கிறது என்று சொன்னால், எப்படி புதிய தொழில்கள் தொடங்குவார்கள். புதிய தொழில் துவங்கவேண்டும் என்று சொல்வதற்கு காரணமே இங்கு நல்ல சூழ்நிலை இருப்பதால்தான். தொழில் துவங்குவதற்கு உகந்த மாநிலம் தமிழ்நாடு. அந்த அடிப்படையில்தான் புதிய, புதிய தொழில்கள் தமிழ்நாட்டிற்கு வர இருக்கின்றது, நிறைய முதலீடு செய்ய இருக்கின்றார்கள். லட்சக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கின்றது. ஆகவே எங்களுடைய வெளிநாட்டுப் பயணம் ஒரு சிறப்பான பயணம். பயனுள்ள பயணமாக அமைந்துள்ளது என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோல அமெரிக்க நாட்டில் உள்ள பஃபல்லோ கால்நடை பண்ணையில், கால்நடை வளர்ப்பை போய் பார்த்தோம். நம்முடைய விவசாயி வளர்க்கின்ற ஒரு பசு மாடு 10 லிட்டர் முதல் 15 லிட்டர் பால் தான் கொடுக்கும். அங்கே கால்நடை பண்ணையில் வளர்க்கப்படுகின்ற பசுமாடு ஒரு வேளைக்கு 40 லிட்டரும், இரண்டாவது வேளைக்கு 30 லிட்டர் மொத்தம் ஒரு பசு, ஒரு நாளைக்கு 70 லிட்டர் பால் கொடுக்கிறது. அந்தப் பால்பண்ணையில் 3,000 பசுக்களை வளர்க்கின்றார்கள். அதில், 60 விழுக்காடு பசுக்கள் பால் கொடுக்கிறது. சராசரியாக அனைத்து பசுக்களிடமிருந்து ஒரு நாளைக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் லிட்டர் கிடைக்கிறது. ஒரு மாவட்டம் முழுவதும் நாம் சேகரிக்கும் பாலை அங்கு ஒரே இடத்தில் உற்பத்தி செய்கிறார்கள்.

அதேபோல கன்று வளர்க்கின்ற முறை, என்ன மாதிரியான தொழில்நுட்பத்தை கடைப்பிடிக்கின்றார்கள் என்பதனை எல்லாம் ஆராய்ந்து, சேலம் மாவட்டம், தலைவாசலில் 900 ஏக்கர் நிலப் பரப்பில் கால்நடைப் பூங்காவை அமைக்கவிருக்கின்றோம். கால்நடை ஆராய்ச்சி நிலையம், மருத்துவமனை அமைக்க இருக்கின்றோம். அப்படி அமைக்கின்றபோது ஆராய்ச்சி கலப்பின பசுக்களை உருவாக்கி அதிக பால் தரக்கூடிய, நோய் எதிர்ப்பு சக்தி கூடிய பசுக்களை உருவாக்கி விவசாயிகளுக்கு கொடுத்து அவர்களது வருமானத்தை இரட்டிப்பாக்க பயணம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இன்றைக்கு நமது தலைமைச் செயலாளர், அதிகாரிகளும் தலைவாசலுக்கு சென்று பார்வையிட்டு வந்திருக்கின்றார்கள். மிக வேகமாக அந்த பணி துவங்க இருக்கிறது என்பதனை தெரிவித்து கொள்கின்றேன்.

எதிர்கட்சித் தலைவர் வேண்டுமென்றே, திட்டமிட்டு இந்த வளர்ச்சி பொறுக்க முடியாமல் வெறுப்புணர்வை காட்டுகின்றார். நல்ல திட்டங்களை தமிழகத்துக்கு கொண்டு வந்து மக்களுக்கு தேவையான நன்மைகளை எங்களுடைய அரசு செய்யும் என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *