சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு
சென்னை, மார்ச் 31–
தமிழகத்தில் வன்னியர்களுக்கான 10.5% உள்ஒதுக்கீடு சட்டத்தை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பு செல்லும் என சுப்ரீம் கோர்ட் இன்று தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு முறை அமலில் உள்ளது. இதில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இப்பிரிவுக்குள் வரும் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கி அவசரச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகள் மற்றும் தனி நபர்கள் சார்பில் 35 வழக்குகள் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை விசாரித்த ஐகோர்ட், “இந்த வழக்கில் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. ஏற்கெனவே அமலில் உள்ள இட ஒதுக்கீட்டில் உள் இட ஒதுக்கீடு வழங்க மாநில சட்டசபை முடிவெடுக்க முடியுமா? சாதி வாரியாக எந்த கணக்கெடுப்பும் இல்லாமல் இது போன்ற உள் இட ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதா? எந்த ஆய்வும் மேற்கொள்ளாமல் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் ஒரு பிரிவுக்கு மட்டும் 10.5 சதவீத ஒதுக்கீடு வழங்க முடியுமா எனப் பல கேள்விகள் உள்ளன.
சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தாமல் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் ஒரு வகுப்புக்கு மட்டும் உள் இட ஒதுக்கீடு வழங்குவது அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது. எனவே, வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு நிறைவேற்றிய அவசரச் சட்டம் ரத்து செய்யப்படுவதாக தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்புக்கு தடை விதிக்க கோரி தமிழக அரசின் தலைமைச் செயலாளர், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், தமிழக சட்டத்துறை, தமிழ்நாடு உயர்கல்வித் துறை சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அதேபோல பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி, சமூகநீதி பேரவையின் தலைவர் வக்கீல் கே.பாலு உள்ளிட்டோர் சார்பிலும் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான இறுதி விசாரணையை நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு 4 நாட்களாக நடத்தி, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த பிப்ரவரி 23-ந் தேதி தள்ளிவைத்தது.
இந்நிலையில், வன்னியர் இடஒதுக்கீடு ரத்து தொடர்பான தமிழக அரசின் மேல்முறையீடு மனுவை விசாரித்த நீதிபதிகள் நாகேஸ்வராவ், பி.ஆர்.கவாய் அமர்வு இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது.
அதில், வன்னியர்களுக்கான 10.5% உள்ஒதுக்கீடு சட்டத்தை ரத்து செய்த சென்னை ஐகோர்ட் தீர்ப்பு செல்லும். உள் இட ஒதுக்கீடு வழங்கும் போது அதற்கான சரியான நியாயமான காரணங்களை அரசு தெளிவுபடுத்த வேண்டும். உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரமிருந்தாலும் சரியான காரணங்களை கூற வேண்டும்.
வன்னியர் உள் ஒதுக்கீடு சட்டம் அரசியல் சட்டத்தின் 14,16 வது பிரிவுகளுக்கு விரோதமானது. எனவே கல்வி, வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 இட ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் அரசாணை ரத்து செய்யப்படுகிறது. சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பை உறுதி செய்து தமிழக அரசின் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்யப்படுகிறது என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.