சென்னை, மார்ச்.4-–
தமிழகத்தில் வடமாநில தொழிலாளர் களுக்கு அச்சுறுத்தல் இல்லை என்றும், வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் பெருமளவில் பணியாற்றி வருகிறார்கள்.
இதில் பீகார், அசாம், மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர்கள் அதிகமாக உள்ளனர். முதலில் கட்டிட பணிக்கு வந்தவர்கள் இன்று ஓட்டல்கள், மளிகை கடை வரை பணியாற்ற தொடங்கி இருக்கிறார்கள்.
பனியன் நகரமான திருப்பூரில் மிக அதிக அளவில் வடமாநிலத்தவர்கள் பணியாற்றுகிறார்கள். இதுதவிர சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் அரசு மற்றும் தனியார் கட்டிட பணிகள், சாலை பணிகளை வடமாநிலத்தவரே ஆக்கிரமித்து உள்ளனர்.
அதிக அளவில் குவிந்து வரும் வடமாநிலத்தவரை கண்காணிக்க வேண்டும் என்று ஒருசில அரசியல் கட்சி தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
பீகார் சட்டசபையில்
எதிரொலித்தது
இந்த நிலையில் தமிழகத்தில் வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாக சமீபகாலமாக வதந்தி பரவி வருகிறது. இதுதொடர்பான போலி வீடியோக்களும் பரவியது.
இவ்விவகாரம் பீகார் சட்டசபை வரை தற்போது சென்று விட்டது. நேற்று அம்மாநில சட்டசபையில் இவ்விவகாரம் எதிரொலித்தது. தமிழகத்துக்கு அனைத்து கட்சி குழுவை அனுப்ப வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கையை அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமாரும் ஏற்றுக்கொண்டு உள்ளார். இந்த நிலையில் வடமாநில தொழிலாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
வடமாநில தொழிலாளர்கள் புரிந்து கொள்ளும் வகையில் இந்தியில் அறிவிப்புகளை தமிழக காவல்துறை தனது இணைய தளத்தில் வெளியிட்டு உள்ளது. வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக கூறப்படுவது வதந்தி, அதை நம்பவேண்டாம் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர். இதுதொடர்பான வீடியோக்களும் போலி என்று தமிழக போலீஸ் கூறியிருக்கிறது.
இதற்கிடையே தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்களுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்று அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்துள்ளார்.
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-–
பெருந்தொழில் மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள் பல ஆண்டுகளாகவே தமிழ்நாட்டில் பெருமளவில் முதலீடு செய்து வந்து அதில் பல மாநிலங்களில் இருந்தும் தொழிலாளர்கள் வந்து அமைதியான சூழ்நிலையில் பணியாற்றி மாநிலத்தின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி வருகின்றார்கள்.
அதேபோல், மேம்பால கட்டுமானம், மெட்ரோ ரெயில் உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளிலும் வடமாநில தொழிலாளர்கள் பெருமளவில் ஈடுபட்டு அந்தத் துறைகளின் வளர்ச்சிக்கு தங்களது பங்களிப்பை வழங்கி வருகின்றார்கள்.
அந்த தொழிலாளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அந்தந்த நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. அனைத்து நிறுவனங்களிலும் தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலச்சட்டங்கள் கடைபிடிக்கப்படுவதை துறை மூலமாக உறுதி செய்யப்படுகிறது. தமிழ்நாட்டுக்கு வருபவர்களை நேசக்கரம் கொண்டு வரவேற்பதுதான் தமிழ் மக்களின் பண்பாடு மற்றும் நடைமுறை.
விருந்தோம்பலுக்கு பெயர்பெற்ற தமிழ்நாட்டு மக்களும், தொழிலாளர் நலன் காக்கும் தமிழ்நாடு அரசும் இந்த உடலுழைப்பு தொழிலாளர்களின் பங்களிப்பை நன்கு உணர்ந்து இருப்பதால், இணக்கமான, அமைதியான சூழ்நிலையில் இங்கு அனைவரும் வாழ்ந்து வருகிறார்கள். இந்தச்சூழ்நிலையில் சில சமூக வலைதளங்களில் உண்மைக்கு மிகவும் மாறான, தவறான உள்நோக்கத்தோடு, வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் சில இடங்களில் தாக்கப்படுவதாக விஷமத்தனமான செய்தி சிலரால் பரப்பப்பட்டு வருகிறது.
உண்மை இல்லை
இதில் எந்தவிதமான உண்மையும் இல்லை என்பதை தமிழ்நாட்டில் இருக்கும் வடமாநிலத்தவர் உள்ளிட்ட அனைவரும் அறிவார்கள். தொழில் அமைதிக்கும், சமூக அமைதிக்கும் எப்போதும் பெயர்பெற்று விளங்கும் தமிழ்நாட்டில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெற்றதாக செய்தி பரப்புபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் மட்டுமல்ல எல்லா மாநில தொழிலாளர்களும் எவ்வித அச்சமுமின்றி அமைதியாக, சிறப்பாகப் பணியாற்றி வருகிறார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.