சென்னை, பிப்.12-
தமிழகத்தில், 19 ஆயிரம் பேருக்கான வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் ரூ.7 ஆயிரத்து 375 கோடிக்கான புதிய முதலீடுகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் வரும் மார்ச் முதல் வாரத்தில் கூட உள்ளதாக தெரிகிறது. அப்போது தமிழக அரசின் பட்ஜெட் (நிதிநிலை அறிக்கை) தாக்கல் செய்யப்பட உள்ளது. இதை முன்னிட்டு நேற்று முன்தினம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூடியது.
அந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. பட்ஜெட்டுக்கான ஒப்புதலை அமைச்சரவை வழங்கியுள்ளது. அதோடு, பல இடங்களில் அரசு புறம்போக்கு நிலங்களில் ஆட்சேபனையற்ற பகுதிகளில் வசிக்கும் 86 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கவும் அமைச்சரவை அனுமதி அளித்தது.
அதோடு மேலும் சில தொழில் முதலீடுகளுக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அவற்றில் புதிய தொழில் முதலீடுகளும், தொழில் விரிவாக்கத்துக்கான முதலீடுகளும் அடங்கும். அந்த வகையில் ரூ.7 ஆயிரத்து 375 கோடி மதிப்பிலான தொழில் முதலீடுகளுக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் கிடைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலகளாவிய திறன் மையங்கள், தோல் அல்லாத காலணி உற்பத்தி, உணவு பதப்படுத்துதல் உள்ளிட்ட தொழில் முதலீடுகள் வேலூர், தூத்துக்குடி, திருச்சி, பெரம்லூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அமைய உள்ளதாக கூறப்படுகிறது. அதன்மூலம் 19 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் அரசு வட்டார தகவல்கள் கூறுகின்றன.