செய்திகள்

தமிழகத்தில் ரூ.294 கோடியில் டாஸ்மாக் கடைகள் கணினிமயம்: தமிழக அரசு நடவடிக்கை

சென்னை, ஜூன் 27–-

தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக்கடைகளும் கணினி மயமாக்குவதற்காக ரூ.294 கோடிக்கான ஆர்டரை ரெயில்டெல் நிறுவனம் பெற்றுள்ளது.

தமிழகத்தில் 5 ஆயிரத்து 329 டாஸ்மாக் மதுபானக் கடைகள் செயல்பட்டு வந்தன. இந்தநிலையில் சட்டசபையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்பை தொடர்ந்து கடந்த 22–-ந் தேதி முதல் 500 டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகளை தமிழக அரசு மூடியது. இதற்கு பொதுமக்கள் தரப்பிலும், டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினரும் வரவேற்பு தெரிவித்திருந்தனர்.

இந்தநிலையில் தற்போது 4 ஆயிரத்து 829 டாஸ்மாக் மதுபானக்கடைகள் செயல்படுகிறது. இந்த கடைகளுக்கு தேவையான மதுபான வகைகளை 3 வித ஆலைகள் உற்பத்தி செய்கின்றன. குறிப்பாக, இந்திய தயாரிப்பில் அயல்நாட்டு மதுபானங்களான பிராந்தி, விஸ்கி, ஓட்கா, ரம், ஜின் போன்றவற்றை மதுபான உற்பத்தி செய்யும் 12 ஆலைகள் உற்பத்தி செய்கிறது. அதேபோல், பீர் வகைகளை 7 ஆலைகளும், ஒயின் வகைகளை 3 ஆலைகளும் உற்பத்தி செய்கின்றன.

டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதால், ரசீது தர வேண்டும். அதேபோல் போலி மதுபாட்டில்களும் நடமாட்டம் இருப்பதால் அதனையும் ஒழித்து மது பிரியர்களுக்கு தரமான மதுபாட்டில்களை, நியாயமான விலைக்கு விற்பனை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

இதனடிப்படையில் தமிழக அரசு அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளையும் கணினி மயமாக்க முடிவு செய்து நடவடிக்கையில் இறங்கி உள்ளது. இதற்கான ஒப்பந்தப்புள்ளியை, மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ரெயில்-டெல் நிறுவனம் ரூ.294 கோடிக்கு பெற்றுள்ளது.

ஆலைகளில் உற்பத்தி செய்யப்படும் மதுபாட்டில்கள் தமிழகத்தில் உள்ள 43 கிடங்குகளுக்கு முதலில் கொண்டு செல்லப்படுகிறது. அங்கிருந்து 4 ஆயிரத்து 829 டாஸ்மாக் கடைகளுக்கு விற்பனைக்கு மது பாட்டில்கள் அனுப்பி வைக்கப்படுகிறது.

அனைத்து விவரங்களும்…

உற்பத்தி செய்யப்பட்ட இடத்தில் இருந்து வாடிக்கையாளர்கள் கைகளில் செல்லும் வரையிலான தகவல்களை வாடிக்கையாளர்கள் அறிய முடியும். இதற்காக ஒவ்வொரு மதுபாட்டில்களிலும் ஒரு பார்கோடு வசதி கொண்டு லேபிள் அச்சிடப்பட்டு ஒட்டப்படுகிறது.

மதுபாட்டில் விற்பனை செய்த பிறகு அந்த பாட்டிலில் உள்ள லேபிளை ஸ்கேன் செய்து பார்த்தால், அந்த பாட்டில் எந்த ஆலையில் எந்த தேதியில், எத்தனை மணிக்கு உற்பத்தி செய்யப்பட்டது? எப்போது கிடங்குக்கு கொண்டு வரப்பட்டது? பின்னர் எப்போது டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு கொண்டு வரப்பட்டது? எந்த டாஸ்மாக் கடையில், எத்தனை ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது? என்ற தகவல்களை வாடிக்கையாளர்கள் அறிய முடியும். அதாவது ‘எண்டு டூ எண்டு’ என்ற முறையில் பிரத்யேக மென்பொருள் (சாப்ட்வேர்) தயார் செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

இதற்கான கணினி நுட்பத்தை வழங்குவதற்கான ஒப்பந்தப்புள்ளியை மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு உள்ளது. 12 மாத கால அவகாசத்தில் இந்தப்பணிகள் முடிவடையும். அதற்கு பிறகு அனைத்து டாஸ்மாக் மதுபானக்கடைகளும் கணினி மயமாக்கப்பட்டுவிடும். எந்த முறைகேடுகளும் நடப்பதற்கான வாய்ப்புகளும் இருக்காது என்று டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் கூறினர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *