செய்திகள்

தமிழகத்தில் மின் கட்டண உயர்வு அடுத்த மாதம் முதல் அமலாகிறது: அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்

சென்னை, செப்.8-

தமிழகத்தில் மின் கட்டண உயர்வு அடுத்த மாதம் (அக்டோபர்) முதல் அமலாகிறது என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாடு முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சிகளில் உள்ள மின்சார அலுவலகங்களில் மின்சார வாகனங்களை ‘சார்ஜ்’ செய்வதற்காக ‘சார்ஜிங் பாயிண்ட்’ அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

முதற்கட்டமாக 100 இடங்களில் வாகன நிறுத்தம் உள்ளிட்ட நவீன வசதியுடன் அதை அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. அதன் பயன்பாடு மற்றும் வரவேற்பை தொடர்ந்து மேலும் விரிவுபடுத்தப்படும்.

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள ஒரு லட்சத்து 45 மின் கம்பங்கள் தயாராக உள்ளன. தாழ்வாக செல்லும் மின்வட கம்பிகள் மாற்றப்பட்டு வருகின்றன. வலுவற்ற மின்கம்பங்கள் மாற்றப்பட்டு உள்ளன. 80 சதவீத பணிகள் தற்போது முடிவுற்றுள்ள நிலையில், பருவமழை தொடங்குவதற்கு முன்பே மழையை எதிர்கொள்ள அவை தயார்படுத்தப்பட்டு உள்ளன.

ஏற்கனவே ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தில் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. 2-ம் கட்டமாக 50 ஆயிரம் இலவச விவசாய மின் இணைப்புகள் 100 நாட்களில் வழங்கும் வகையிலான திட்டம் இந்த மாத இறுதிக்குள் முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்படும்.

மின் கட்டண உயர்வுக்கு ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதல் விரைவில் கிடைக்க உள்ளது. எனவே திருத்தப்பட்ட புதிய மின் கட்டணத்தை அடுத்த மாதம் முதல் அமல்படுத்த திட்டமிடப்பட்டு வருகிறது.

மின்வாரிய அதிகாரிகள் மீது புகார்கள் தொடர்ந்து வரும் நிலையில், அதிகாரிகள் தவறு செய்யாமல் கண்காணிக்க மின் வாரியத்தில் உள்ள 12 மண்டலங்களுக்கும் தலா 3 பேர் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட உள்ளது. மொத்தம் 36 பேர் இந்த கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *