புதுடெல்லி, அக்.14–
தமிழக அரசின் மின்கட்டண உயர்வுக்கு தடையில்லை என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் மின்கட்டணம் உயர்வை தமிழக அரசு அறிவித்தது. இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட் மதுரை கிளையில் நூற்பாலைகள் சங்கம், சில நிறுவனங்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் ‘தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்டத்துறை சார்ந்த உறுப்பினர் நியமிக்கும் வரை மின் கட்டண உயர்வுக்கும், கருத்து கேட்பு கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தி இருந்தனர். இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்டத்துறை சார்ந்த உறுப்பினர் நியமிக்கும் வரை மின் கட்டண உயர்வுக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.
இதற்கு எதிராக தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சென்னை ஐகோர்ட் மதுரை கிளையின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது.அப்போது நீதிபதிகள், தனி நீதிபதி விதித்த இடைக்கால தடையை நீக்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனால் மின் கட்டண உயர்வுக்கான தடை நீங்கியது.
இதற்கிடையே இரு நீதிபதிகள் உத்தரவை எதிர்த்து நூற்பாலைகள் சங்கம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தமிழகத்தில் மின்கட்டண உயர்வுக்கு தடை விதிக்க மறுத்து விட்டனர். மேலும் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் 3 மாதத்தில் சட்டத்துறை அதிகாரியை நியமிக்க தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தி உள்ளது. இதனையடுத்து தமிழக அரசு நியமனம் செய்யவில்லை என்றால் மீண்டும் சுப்ரீம் கோர்ட்டை நாட மனுதாரருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர்.