சென்னை, மார்ச் 3–
தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் கடந்த ஆண்டில் 52% அதிகரித்துள்ளது. பெண் குழந்தைகள் வாழத் தகுதியற்ற நாடாக தமிழ்நாட்டை மாற்றி விடக் கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் போக்சோ எனப்படும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான சட்டத்தின்படி 2024-ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 6975 ஆக அதிகரித்திருக்கிறது. 2023-ஆம் ஆண்டு இதே சட்டத்தின்கீழ் பதிவான 4581 வழக்குகளுடன் ஒப்பிடும் போது இது 2394 , அதாவது 52.30% அதிகம் ஆகும். தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் இந்த அளவுக்கு அதிகரித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இத்தகையக் குற்றங்களைத் தடுக்க அரசும், காவல்துறையும் தவறியது கண்டிக்கத்தக்கது.
போக்சோ சட்டம் குறித்து மக்களிடம் அதிக விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது; அதனால் தான் இந்த அளவுக்கு வழக்குகள் பதிவாகியிருக்கின்றன என்று கூறி, இந்த வேதனையையும் தங்களின் சாதனையாக மாற்றிக் கொள்ள அரசும், காவல்துறையும் முயலக்கூடாது. அண்மைக்காலங்களாகவே பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்படும் செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. பள்ளிக்கூடங்கள் கூட குழந்தைகளுக்கு பாதுகாப்பற்றவையாக மாறி விட்டது வேதனையளிக்கிறது. குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது போன்ற ஏதேனும் ஒரு சாக்குபோக்கு கூறி இந்த மோசமான சூழலை தமிழக அரசு கடந்து சென்று விடக் கூடாது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பெருகி வருவதன் மூலம், தமிழ்நாடு பெண்களும், குழந்தைகளும் வாழத் தகுதியற்ற நாடு என்ற நிலை ஏற்பட்டு விடக் கூடாது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனையை விரைவாக பெற்றுத் தருவதன் மூலமாகவும், குற்றங்களைத் தடுப்பதன் மூலமாகவும் தமிழ்நாட்டில் பெண்களும், குழந்தைகளும் அச்சமின்றி நடமாடும் சூழலை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.