செய்திகள்

தமிழகத்தில் புதிக வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு

அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை, மே 21–

தமிழ்நாட்டில் ஒமிக்ரான் பிஏ–4 புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை கிண்டி கிங் இன்ஸ்டியூட்டில் அமைந்துள்ள தேசிய முதியோர் நல மருத்துவ மையத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவக் கல்வி இயக்குனர் டாக்டர் நாராயணபாபு ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில்,

கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் ரூ.151 கோடி 17 லட்சத்தில் தேசிய முதியோர் நல மருத்துவர் வளாகம் கட்டப்பட்டது. கடந்த காலங்களில் கொரோனா அதிகரித்த போது, இது 800 படுக்கை உடன் சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டது. தற்போது கொரோனா குறைந்ததால் மீண்டும் அதை தேசிய முதியோர் நல மருத்துவமனை மையமாக மாற்றப்படும் என அறிவித்தோம். ஆனால் தற்போது ஆய்வு செய்தபோது, சுவர்களில் சிமெண்ட் பூசாமல் மண்ணில் கட்டியது போல, கையில் தொட்டாலே காரை உதிரும் அளவிற்கு உள்ளது.

கிங் இன்ஸ்டிடியூட்

கட்டிடத்தின் தரம் ஆய்வு

இதில் தற்போது முதியோர் மருத்துவமனையாக மாற்றினால் ஆபத்து ஏற்படுமோ என்ற சந்தேகம் எழுகிறது. இதுதொடர்பாக பொதுப்பணித் துறையை அணுகி 15 நாட்களுக்குள் கட்டிடத்தின் தரத்தை ஆய்வு செய்து அறிக்கையாக சமர்ப்பிக்க கூறியிருக்கிறேன். 3 நாட்களில் இந்த கட்டடத்தின் மாதிரிகள் சேகரிக்க படவுள்ளது. ஆய்வின் போது ஏதாவது முறைகேடு நடந்து இருப்பது தெரியவந்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

நாவலூரில் ஒரு குடும்பத்தில் உள்ள 2 பேருக்கு (தாய், மகள்) கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்தது அதில் ஒருவருக்கு ஒமிக்கிரான் பிஏ4 என்ற புதிய வகை தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் குணமடைந்து, தற்போது நலமுடன் இருக்கிறார்கள். அவர்களுடைய தொடர்பில் இருந்தவர்களை சோதனை செய்ததில் யாருக்கும் எந்தத் தொற்றும் இல்லை என தெரியவந்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா, ஓமிக்ரான் உள்ளிட்ட 4 வகையான பெருந்தொற்று பாதிப்பு மட்டுமே உள்ளது. புதிய வகை கொரோனா பரவும் தன்மையில் இல்லை. ஆப்ரிக்க நாடுகளில் கண்டறியப்பட்ட பிஏ–4 கொரோனா தற்போது தமிழகத்திலும் பரவியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் ஓமிக்ரான் பிஏ–4 வகை பரவி இருக்கிறதா என்பதை மத்திய அரசு தெளிவுப்படுத்தும்.

1000 மருத்துவ பணி

இடங்களுக்கு கலந்தாய்வு

மருத்துவத்துறையில் 1000 மருத்துவ பணி இடங்களுக்கு பணி மாறுதல் செய்யப்பட உள்ளது. இதற்கான கலந்தாய்வு 24–ந்தேதி முதல் 3 நாட்கள் நடைபெற்ற பிறகு பணி மாறுதல் செய்யப்பட உள்ளது. ஒரே நேரத்தில் 1000 பணியிடங்களை நிரப்புவது, இதுவே முதல் முறை.மேலும் ஜூன் 12–ந்தேதி 1 லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. உக்ரைனிலிருந்து வந்த மருத்துவ மாணவர்களுக்கு மருத்துவ கல்வி வழங்குவது குறித்து மத்திய அரசு தான் முடிவெடுக்க வேண்டும் மாநில அரசு தன்னிச்சையாக செயல்பட முடியாது” என தெரிவித்தார்.

இந்தியாவில் 2 நாட்களுக்கு முன்பு பிஏ–4 வகை கொரோனா தொற்றின் முதல் பாதிப்பு ஐதராபாத்தில் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.