செய்திகள்

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று தொடங்கியது: 8.21 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்

Makkal Kural Official

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து

கணினி வழியாக தேர்வு எழுதும் பார்வை மாற்றுத்திறனாளி மாணவன்

சென்னை, மார்ச் 3–

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று தொடங்கியது. மொத்தம் 8.21 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர்.

பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

தமிழ்நாட்டில் 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பாண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்றுதொடங்கியுள்ளது. இந்த தேர்வு வருகிற 25-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் 3,316 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 7,518 பள்ளிகளில் இருந்து 8.03 லட்சம் மாணவர்கள், 18,344 தனித்தேர்வர்கள், 145 கைதிகள் என மொத்தம் 8.21 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர்.

தேர்வு அறை கண்காணிப்பாளர் பணியில் 43,446 ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். அதே போல் முறைகேடுகளை தடுக்க 4,470 நிலையான மற்றும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு மையங்களில் மாணவ, மாணவியருக்கு தேவையான அத்தியாவசிய வசதிகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் பிளஸ்2 தேர்வு மையத்தை கல்வித்துறை முதன்மை செயலாளர் சந்திரமோகன் ஆய்வு செய்தனர்.

ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது அதிகபட்சம் 3 ஆண்டுகள் அல்லது நிரந்தரமாக தேர்வு எழுத தடை விதிக்கப்படும் என்றும் ஒழுங்கீன செயல்களை ஊக்கப்படுத்த முயன்றால், பள்ளி நிர்வாகத்தின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும் தேர்வு துறை தெரிவித்துள்ளது. மேலும் பொதுத் தேர்வு குறித்த சந்தேகங்கள், புகார்களை தெரிவிக்க, பள்ளிக்கல்வி துறையின் ‘14417’ என்ற இலவச உதவி மையத்தை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.கம்ப்யூட்டரில் தேர்வு எழுதும்

முதல் மாணவன் ஆனந்தன்

தமிழகத்தில் முதல் முறையாக பார்வை மாற்றுத்திறனாளி மாணவர் எம். ஆனந்தன் கணினி வழியாக பொதுத் தேர்வை எழுதுகிறார். எம். ஆனந்தன் முதல் முறையாக கணினி மூலம் பிளஸ் 2 பொதுத் தேர்வை எழுதி வருவதாகவும், அண்ணா மேல்நிலைப் பள்ளி சிறப்பு மையத்தில் இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாகவும் திருவள்ளுவர் ஆட்சியர் பிரதாப் தெரிவித்துள்ளார்.

தேர்வின்படி, ஸ்கிரைப் என்பவர், மாணவருடன் இருப்பார். அவர் வினாத்தாளில் இருக்கும் வினாக்களை மாணவர்களுக்குப் படித்துக் காண்பிப்பார். உடனடியாக அந்த வினாவுக்கான விடையை கணினியில் மாணவர் தட்டச்சு செய்து பதிவு செய்வார். தேர்வு முடிந்ததும், அந்த தேர்வுத் தாள் பள்ளி நிர்வாகத்தால் பிரிண்ட் எடுக்கப்பட்டு, மற்ற தேர்வுத் தாள்களைப் போல அனுப்பிவைக்கப்படும்.

முதலமைச்சர் வாழ்த்து

2024–-25-ஆம் கல்வியாண்டுக்கான 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில கூறியிருப்பதாவது:–

“தமிழ்நாட்டின் 11-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவச் செல்வங்களுக்கான பொதுத் தேர்வுகள் முறையே இன்ற மற்றும் 5–ந் தேதி அன்றும் தொடங்க இருக்கின்றன. 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வினை 8,21,057 மாணவ, மாணவியர்களும், 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை 8,23,261 மாணவ, மாணவியர்களும் தேர்வெழுதவுள்ளனர்.

கடந்த ஒராண்டு காலமாக மாணவச் செல்வங்களாகிய உங்களுக்கு உங்களது பெற்றோர்கள், ஆசிரியர்கள் உங்களது கல்விக்கு மிகுந்த உறுதுணையாகவும், தூண்டுகோலாகவும் இருந்து வழி நடத்தியிருப்பார்கள். அவர்களது அரவணைப்பில் நீங்கள் பொதுத்தேர்வினை எதிர்கொள்ள ஆயத்தமாக இருப்பீர்கள். இப்பொதுத்தேர்வுகள் உங்களது உயர் கல்விக்கும், வாழ்க்கைக்கும் மிக முக்கியமான அடித்தளமாகும். நீங்கள் தேர்வினை மன அமைதியுடன், தன்னம்பிக்கையுடன் எழுத வேண்டும். நீங்கள் இதுவரை செய்த முயற்சிகள், உங்கள் தேர்வில் நல்ல முடிவுகளைத் தரும். உங்களின் உழைப்பில் முழு நம்பிக்கையும் எனக்குள்ளது. பதற்றமின்றி, உற்சாகத்துடன் தேர்வுகளை எதிர்கொள்ளுங்கள். உங்கள் உடல்நலம், தூக்கம், உணவு மற்றும் மனநிலையை கவனித்துக் கொள்ளுங்கள்.

உங்களது உயர்கல்விக்காக புதுமைப்பெண், நான் முதல்வன் போன்ற பல்வேறு திட்டங்களை இவ்வரசு செயல்படுத்தி வருகிறது. நானும் தமிழ்நாடு அரசும் உங்கள் பக்கத்திலேயே எப்பொழுதும் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம். உங்கள் கடின உழைப்புக்கு முழு வெற்றி கிடைக்க என் மனமார்ந்த வாழ்த்துகள்

இவ்வாறு அவர் கூறியுள்ளார்

அமைச்சர் அன்பில் மகேஷ்

நேரில் வாழ்த்து

தமிழக முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நாகை வந்திருந்த தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று காலை நாகப்பட்டினத்தில் அமைந்துள்ள நடராஜன் தமயந்தி மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதவுள்ள மாணவர்களைச் சந்தித்து ஊக்கமளித்தார். பயம் இன்றி தேர்வு எழுதுமாறு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். அப்பள்ளி தேர்வு மையமாக செயல்படுவதால் அருகாமையிலுள்ள பள்ளி மாணவர்கள் சிறப்பு பேருந்தில் அழைத்து வரப்பட்டார்கள். அவர்களையும் சந்தித்து வாழ்த்துகள் தெரிவித்தார்.

விஜய் வாழ்த்து

தமிழக வெற்றிக் கழகம் கட்சி தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பொதுத் தேர்வு எழுத உள்ள 11 மற்றும் 12ம் வகுப்பைச் சேர்ந்த அன்புத் தம்பிகள் மற்றும் தங்கைகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.பொதுத் தேர்வினைத் துணிவுடன், தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டு, தேர்வில் வெற்றி பெற்று, வாழ்வில் சிகரம் தொட வாழ்த்துகிறேன்’ என தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *