செய்திகள்

தமிழகத்தில் நாளை முதல் தனியார் பால், தயிர் விலை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்வு

சென்னை, ஜன. 19–

தமிழகத்தில் நாளை முதல் தனியார் பால், தயிர் விலை லிட்டருக்கு 2 ரூபாய் உயருகிறது.

அரசின் ஆவின் நிறுவனத்தின் பால் தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல தனியார் நிறுவனங்களும் பால் விற்பனையில் ஈடுபட்டு உள்ளன. ஓட்டல்கள், டீக்கடைகள் போன்றவற்றுக்கு தனியார் பால் தான் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. ஆவின் பாலிற்கும், தனியார் பாலிற்கும் லிட்டருக்கு ரூ.20 வரை வித்தியாசம் இருந்து வருவதால் ஆவின் பால் கடைகளில் உடனே விற்று தீர்ந்து விடுகிறது. கடந்த ஆண்டு 4 முறை தனியார் பால் விலை உயர்த்தப்பட்டது. கொள்முதல் விலை உயர்த்தப்படாத நிலையில் விற்பனை விலையை மட்டும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் ஆந்திராவை சேர்ந்த தனியார் பால் நிறுவனங்களான ஹெரிடேஜ், திருமலா, ஜெர்சி, வல்லபா, சீனிவாசா ஆகியவை ஆண்டின் தொடக்கத்திலேயே பால் விலையை உயர்த்தி உள்ளன. இந்த நிறுவனங்கள் பால், தயிர் ஆகியவற்றின் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி உள்ளது. இந்த விலை உயர்வு நாளை (20-ந்தேதி) முதல் நடைமுறைக்கு வருகிறது.

இதுகுறித்து தனியார் பால் நிறுவனங்கள் பால் முகவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. பால் கொள்முதல் விலை மற்றும் உற்பத்தி மூலப்பொருட்களின் விலை ஏற்றத்தால் பால் விலையில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது. அதன்படி தனியார் பால் விலை 3 வகையாக பிரித்து உயர்த்தப்பட்டுள்ளது. தனியார் சமன்படுத்தப்பட்ட பால் லிட்டர் ரூ.50-ல் இருந்து ரூ.52 ஆக உயருகிறது. (ஆவின் நீல நிற பாக்கெட் ரூ.40), இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் ரூ.48-ல் இருந்து ரூ.50 ஆகவும் நிலைப்படுத்தப்பட்ட பால் ரூ.62-ல் இருந்து ரூ.64 ஆகவும் உயர்கிறது.

ஆவினில் இந்த பால் பாக்கெட் லிட்டர் ரூ.44-க்கு விற்கப்படுகிறது. தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.20 அதிகமாகும். நிறை கொழுப்பு பால் ரூ.70-ல் இருந்து ரூ.72 ஆக அதிகரிக்கிறது. ஆவினில் ஆரஞ்சு நிற பால் பாக்கெட் லிட்டர் ரூ.60 ஆகும். தயிர் லிட்டர் ரூ.72-ல் இருந்து ரூ.74 ஆக உயர்ந்துள்ளது.

தனியார் பால் விலை உயர்வுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்க தலைவர் பொன்னுசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மத்திய இணை மந்திரி எல்.முருகனுக்கு அவர் கடிதம் எழுதி உள்ளார். தனியார் பால் நிறுவனம் தன்னிச்சையாக விலை உயர்த்துவதை தடுக்க வேண்டும். பால் கொள்முதல், விற்பனை விலையை அரசு நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *