புதுடெல்லி, ஜூன் 9–
தமிழகத்தில் நாளை முதல் 5 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேபோல, கேரளா மற்றும் கர்நாடகாவுக்கு ஜூன் 13ம் தேதி முதல் கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: ஜூன் 10ம் தேதி முதல் தென்னிந்தியாவின் மேற்கு கடற்கரை பகுதிகள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக நாளை முதல் 14ம் தேதி வரையில் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால், கேரளா மற்றும் மாஹே ஆகிய இடங்களில் மிக கனமழை பெய்யும் என்றும், கடலோர ஆந்திரா, ஏனாம் மற்றும் ராயலசீமாவில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதேபோல 13ம் தேதி முதல் கர்நாடகா, கேரளாவில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. 15ம் தேதி இந்த இரு மாநிலங்களிலும் குறிப்பிட்ட பகுதிகளுக்கு ஆரஞ்ச் அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் நாட்டின் சில பகுதிகளில் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது.
ராஜஸ்தானில் கடுமையான வெப்ப அலைகள் வீசும். ஹிமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் தவிர வடமேற்கு இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த 4 நாட்களுக்கு வெப்ப அலைகள் கடுமையாக வீசும்.
தமிழகத்தில் ஈரோடு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 100 சதவீத்திற்கு மேல் வெயில் பதிவாகி உள்ளது.125 ஆண்டுகளில்
இல்லாத அளவுக்கு மழை
கோடை காலத்தில் இதுவரை இல்லாத வகையில் மழை பெய்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிலும் கடந்த மாதம் (மே) இந்தியாவில் இயல்புக்கு அதிகமாக மழை கொட்டியிருப்பதாகவும், 125 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த மழை பதிவாகி இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்த மாதத்தில் 30 அதி கனமழை நிகழ்வுகளும், 155 மிக கனமழை நிகழ்வுகளும், 514 கனமழை நிகழ்வுகளும் ஏற்பட்டுள்ளது. அப்படி பெய்த மழையினாலும், மழைக்கு முந்தைய மற்றும் பிந்தைய நிகழ்வுகளாலும் உயிரிழப்புகளும் ஏற்பட்டிருக்கின்றன. அதன்படி இடி–மின்னல் தாக்கி மட்டும் உத்தரபிரதேசம், மராட்டியம், ஒடிசா, ஆந்திரா, சத்தீஷ்கார், கர்நாடகா, ஜார்கண்ட், பீகார், டெல்லி, அரியானா, மத்திய பிரதேசம், தெலுங்கானா, அசாம், குஜராத், கேரளா, பஞ்சாப், சண்டிகர், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் 199 பேர் இறந்துள்ளனர்.
மேலும் கனமழை பெருவெள்ளத்தினால் மராட்டியம், குஜராத், கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, அசாம், டெல்லியில் 58 பேரும், காற்றினால் ஜம்மு காஷ்மீர் மற்றும் உத்தரபிரதேசத்தில் 3 பேரும் உயிரிழந்துள்ளனர். ஆக மொத்தம் 260 பேர் உயிரிழந்து இருப்பதாக வானிலை ஆய்வு மையம் புள்ளி விவரங்களுடன் சுட்டிக்காட்டியிருக்கிறது.