செய்திகள்

தமிழகத்தில் தொடர் மழையிலும் மின் வினியோகத்தில் பாதிப்பு இல்லை

அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

சென்னை, நவ. 12–

தமிழகத்தில் தொடர் மழையிலும் மின் வினியோகத்தில் பாதிப்பு இல்லை என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

சென்னை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக தலைமை அலுவலகத்தில் உள்ள மாநில மின் சுமை கண்காணிப்பு மையத்தில் இன்று மின்சாரம், மதுவிலக்கு துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது மேலாண்மை இயக்குநர் ரா.மணிவண்ணன், மின் பகிர்மானம் இயக்குநர் மா.சிவலிங்கராஜன் மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

பின்னர், அமைச்சர் வி.செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது:–

சென்னையை பொறுத்தவரைக்கும் மின் விநியோகத்தில் மொத்தம் 1,834 பீடர்கள் இருக்கிறது. அதில் 18 பீடர்கள் மட்டும் டிரிப் ஆகியது. மழையினால் பாதிப்புக்கள் ஏற்பட்டது. அதற்கு உடனடியாக பேக் பீடிங் மூலமாக மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த 18 பீடர்களையும் சரிசெய்யயும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு மணி நேரத்தில் சரிசெய்யப்பட்டு, ரெகுலர் பீடரில் விநியோகம் செய்யப்படும்.

சென்னையை பொறுத்தவரைக்கும் இந்த சூழல் தான். எந்த விதத்திலும் சென்னையில் மின் விநியோகத்தில் பாதிப்பு இல்லை. சென்னையில் அனைத்து மின் நுகர்வோர்களுக்கும் சீரான மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் கடுமையான மழை பெய்தாலும் கூட, நாகப்பட்டினம் மாவட்டத்தில், குறிப்பாக திருவெண்காடு பகுதியில் ஒரு 110 கே.வி. சி.டி. நேற்று இரவு பழுதடைந்த காரணத்தால் 2 மணி நேரம் மின் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக இரவோடு, இரவாக சரிசெய்யப்பட்டு அந்தப் பகுதியில் சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது.

களப்பணியில்

11 ஆயிரம் பணியாளர்கள்

எனவே, தமிழகத்தை பொறுத்தவரை மழையின் காரணமாக எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது. அதற்கு காரணம், முதலமைச்சர் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை தான். குறிப்பாக, இந்த மழைக் கால சிறப்பு பணிக்காக 11,000 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு களப்பணியாற்றி வருகின்றனர்.

1,040 பணியாளர்கள் பகலிலும், 600 பணியாளர்கள் இரவிலும் பணிபுரிந்து, மின் விநியோகத்தில் சிறப்பு கவனம் செலுத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது. வழக்கமாக எல்லா வீடியோக்கள் மற்றும் குறும்படம் மூலமாக பொதுமக்களுக்கு மின் விபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மழைக்காலத்தில் பொதுமக்கள் கவனமுடனும், பாதுகாப்புடனும் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். எந்த இடத்திலும் பாதிப்பு ஏற்படாத வகையில் தான் மின்சார வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

கடந்த காலங்களில் மழை வருகிறது என்றாலே மின்சாரத்தை நிறுத்தி வைத்து விடுவார்கள். காற்றடித்தாலும் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்ற நிலை இருந்தது. ஆனால், அந்த சூழல் இப்பொழுது இல்லை. முதலமைச்சர் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை தான் அதற்கு காரணம். எவ்வளவு மழை பெய்தாலும் சரி மின் விநியோகம் நிறுத்தப்படக் கூடாது. பாதிப்பு ஏற்பட்டால் மட்டும் மின்சாரம் நிறுத்தப்பட வேண்டும், அதுவும் உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

அதனடிப்படையில், சென்னையில் ஏறத்தாழ மழையால் பாதிக்க கூடிய பகுதிகளில் 3,000க்கும் மேற்பட்ட பில்லர் பாக்ஸ்கள் 1 மீட்டர் அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளன. சென்னையில், பெருநகர் மாநகராட்சி நிர்வாகம் எந்த இடத்திலும் மழைநீர் தேங்காமல் இருக்க மிகச் சிறப்பாக நடவடிக்கை எடுத்துள்ளது. மின் விநியோகத்தை பொறுத்தவரைக்கும் இன்னும் சென்னையில் விடுபட்ட இடங்களில் பில்லர் பாக்ஸ்கள் மழையால் பாதிப்பு இல்லாத இடங்களில் கூட 1 மீட்டர் அளவிற்கு உயர்த்தப்படும்.

அதிகமான மழை பெய்துள்ள பகுதிகளில் சம்மந்தப்பட்ட அலுவலர்களுடன் காணொளி காட்சி வாயிலாக ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் எங்கேயும் மின்சாரம் தடை ஏற்படவில்லை. தடை அல்லது பாதிப்பு ஏற்பட்டால் தான் மின்னகத்திற்கு புகார் வரும். மழை தொடர்பாக கூடுதலாக புகார் ஏதும் வரவில்லை.

நேற்று சராசரி அளவு எடுத்துக் கொண்டால் 11,200 மெகா வாட் அளவு தான் தமிழ்நாட்டின் மின் தேவையாக இருந்துள்ளது, இன்று காலையில் 11,600 மெகா வாட் தான் தேவை இருந்தது. மழை காரணமாக நமது தேவை குறைந்துள்ளது. தற்போது, சோலார் உற்பத்தியில் 1,400 மெகவாட் அளவிற்கு உள்ளது. செலவினம் கூடும் என்பதால் அனல் மின் நிலைய உற்பத்தியை குறைத்து, சோலார் மற்றும் ஹைட்ரோ உற்பத்தியை முழுவதுமாக பயன்படுத்தியுள்ளோம்.

இந்த ஆண்டு வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வாக முதலமைச்சர் தன்னுடைய கரங்களால் 20,000 விவாசாயிகளுக்கு மின் இணைப்பை நேற்று வழங்கினார். 50 ஆயிரம் விவசாய மின் இணைப்பு வழங்கப்படும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதில், 20 ஆயிரம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

10 ஆண்டு ஆட்சியில்

2.20 லட்சம் மின் இணைப்பு

முதலமைச்சர் தனது உரையில் தெளிவாக கூறினார். அதாவது கடந்த 10 ஆண்டு ஆட்சியில் மொத்தமே 2.20 லட்சம் விவசாய மின் இணைப்புத் தான் கொடுக்கப்பட்டது. ஆனால், இந்த அரசு அமைந்த 15 மாதத்தில் 1.5 லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படுகிறது. மின் விநியோக திட்டங்களுக்காக விவசாயிகளுக்காக இருந்தாலும் சரி, 100 யூனிட் மின்சாரமாக இருந்தாலும் சரி, கைத்தறி, விசைத்தறி நெசவாளர்களாக இருந்தாலும் சரி அரசு மானியம் என்பது 9,048 கோடியிலிருந்து, 4,000 கோடி கூடுதலாக வழங்கப்படுகிறது. வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு மானியம் விடுவிப்பு.

இவ்வாறு அமைச்சர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *