செய்திகள்

தமிழகத்தில் தொடர்ந்து 10–வது நாளாக நேற்றும் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

759 பேருக்கு தொற்று உறுதி; 547 பேர் டிஸ்சார்ஜ்

சென்னை, மார்ச்.15-

தமிழகத்தில் தொடர்ந்து 10-வது நாளாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நேற்று 759 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக புதிதாக கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையில் மட்டுமே முதலில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. தற்போது கோவை, செங்கல்பட்டு, திருவள்ளூர், தஞ்சாவூரிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் 4 ஆயிரத்துக்கும் குறைவாக இருந்த சிகிச்சை பெறுகிறவர்களின் எண்ணிக்கை தற்போது 4 ஆயிரத்து 870 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 67 ஆயிரத்து 87 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 449 ஆண்கள், 310 பெண்கள் என மொத்தம் 759 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 294 பேரும், செங்கல்பட்டில் 63 பேரும், கோவையில் 58 பேரும், குறைந்தபட்சமாக தர்மபுரி, ராணிப்பேட்டை, தென்காசி, ராமநாதபுரத்தில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 1 கோடியே 79 லட்சத்து 66 ஆயிரத்து 115 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 8 லட்சத்து 59 ஆயிரத்து 726 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று கொரோனாவுக்கு 4 பேர் உயிரிழந்துள்ளார். தமிழகத்தில் இதுவரையில் 12,547 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 547 பேர் நேற்று குணமடைந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர்.

இதுவரை தமிழகத்தில் 8 லட்சத்து 42 ஆயிரத்து 309 பேர் கொரோனாவில் இருந்து பூரண குணம் அடைந்து உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *