செய்திகள்

தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு 10 கம்பெனி துணை ராணுவத்தினர் வருகை

சென்னை, மார்ச் 16–

தமிழ்நாட்டில் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு 10 கம்பெனி துணை ராணுவத்தினர் வந்திருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார்.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நேற்று சென்னை தலைமை செயலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தமிழகத்துக்கு 10 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் இன்றும் (நேற்று), நாளையுமாக (இன்று) வருகின்றனர். இதில் 6 கம்பெனி துணை ராணுவத்தினர் இன்று பிற்பகலில் (நேற்று) வந்துள்ளனர்.

சென்னையில் 4 கம்பெனி வீரர்கள் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். கோவை, மதுரை, திருச்சி, நெல்லை, சேலம், திருப்பூர் ஆகிய பகுதிகளுக்கு தலா ஒரு கம்பெனி துணை ராணுவத்தினர் நாளை (இன்று) செல்ல உள்ளனர்.

ஒவ்வொரு கம்பெனி துணை ராணுவப் பிரிவிலும் 90 முதல் 100 வீரர்கள் இடம்பெற்றிருப்பார்கள். அவர்களில் 80 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். மற்ற வீரர்கள் கண்காணிப்புக் குழுவினருடன் இணைந்து செயல்படுவார்கள். வாக்குப் பதிவுக்கு முன்பு மேலும் துணை ராணுவத்தினர் வருவார்கள்.

நாடாளுமன்றத் தேர்தலில் ஒவ்வொரு மாவட்ட தேர்தல் அதிகாரியும், தேர்தல் நடத்தும் அதிகாரியாகவும் செயல்படுவார். ஒரே மாவட்டத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட மக்களவைத் தொகுதிகள் இடம்பெற்றிருந்தால், வருவாய் கோட்டாட்சியர் நிலைக்குக் குறையாத அதிகாரிகள் தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக இருப்பார்கள்.

பெயர் சேர்க்க 7 லட்சம் மனு

வாக்காளர் பட்டியல் தகவல்கள் பெறுவது, தேர்தல் விதிமீறல் புகார்களை தெரிவிப்பது ஆகியவற்றுக்காக வைக்கப்பட்டுள்ள கட்டணமில்லாத தொலைபேசி எண் 1950-க்கு இதுவரை 46 ஆயிரம் அழைப்புகள் வந்துள்ளன. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக விண்ணப்பித்திருந்த 7 லட்சம் மனுக்களில், 3 லட்சம் பேரின் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டன. மீதமுள்ள 4 லட்சம் மனுக்கள் ஆய்வில் உள்ளன.

ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் முன்பு போடப்பட்ட கோலத்தில் வரையப்பட்டிருந்த தாமரை உருவத்தை தேர்தல் பணியாளர்கள் அழித்தது பற்றி எங்கள் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது. இதுதொடர்பாக, மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் நடந்து வரும் வாகன சோதனையில் இதுவரை ரூ.4 கோடியே 14 லட்சத்து 69 ஆயிரத்து 380 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உரிமம் பெற்றுள்ள 21 ஆயிரத்து 999 கைத்துப்பாக்கிகளில் 13 ஆயிரத்து 523 துப்பாக்கிகள் காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. உரிய உரிமங்கள் இல்லாமல் வைக்கப்பட்டிருந்த 27 கைத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. 18 கைத்துப்பாக்கி உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன.

3 ஆயிரம் வழக்கு பதிவு

இந்தத் தேர்தலை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 3 ஆயிரத்து 351 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1,175 பேர் தடுப்புக் காவல் சட்டப்படி சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், கோர்ட்டுகளில் ஆஜராகாத 4 ஆயிரத்து 289 பழைய குற்றவாளிகளுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்டு பிறக்கப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியாக வருமான வரித்துறையின் கண்காணிப்பு குழுக்கள் தற்போது முழுமையாக இல்லாததால், துணை கமிஷனர், உதவி கமிஷனர் மற்றும் 3 வருமான வரி அலுவலர்களைக் கொண்ட மாவட்ட குழுக்களை அமைக்கக் கோரியுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *