செய்திகள் நாடும் நடப்பும்

தமிழகத்தில் தேர்தல் களம் தயார்


வை–மை தரும் நல்ல தலைமை… பாகம் –1: ஆர்.முத்துக்குமார்


நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்புகளை தொடர்ந்து நாடெங்கும் தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் மக்கள் எதிர்பார்க்கும் பரபரப்பான திருப்பங்கள் நடைபெற்றும் வருகிறது.

கட்சிகளுக்கிடையே கூட்டணி ஏற்படுத்திக் கொள்வது முதல் எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது வரை பல்வேறு திரைமறைவு பேரங்கள் ஒருவழியாக முடிவுக்கு வந்து தமிழகத்தில் மும்முனை போட்டி என்ற நிலை உருவாகிவிட்டது.

தமிழகத்தின் பிரதான கூட்டணிகள் திமுக, அண்ணா தி.மு.க. என்று இருந்து வருவதை அறிவோம். முதல் முறையாக தேசிய முற்போக்கு கூட்டணி மூன்றாவது அணியாக இம்முறை களம் இறங்கி விட்டது.

பாரதிய ஜனதாவுடன் பா.ம.க. மற்றும் அண்ணா திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், டிடிவி தினகரன், சரத்குமார் மற்றும் பலர் இணைந்து தேசிய முற்போக்கு கூட்டணிக்கு வலு சேர்த்துள்ளனர்.

திமுக, அண்ணா திமுக ஆதரவின்றி பாரதிய ஜனதா மூன்றாவது அணியாக களம் இறங்க அதிமுக்கிய காரணம் பிரதமர் மோடி அலை வீசுவதால் அதில் பாரதிய ஜனதா மகத்தான வெற்றி பெறும் என்று நம்புகிறார்கள்.

எது எப்படியோ நேற்று தேர்தல் வாரியம் ஏப்ரல் 19 அன்று நடைபெறும் முதல் கட்ட வாக்கெடுப்புக்கு அதிகாரம் பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி தமிழகத்தில் 39 இடங்களுக்கும் அருகாமை மாநிலமான புதுவையில் ஒரு பாராளுமன்ற சீட்டிற்கும் வேட்பாளர் விண்ணப்பம் துவங்கிவிட்டது.

வேட்பாளர் மனு தாக்கல் மார்ச் 28 வரையும் பரிசீலனை மார்ச் 30 அன்று செய்யப்படும் என்று கூறியுள்ளார்கள்.

முதல் கட்ட வாக்குப்பதிவு தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கும் ராஜஸ்தானில் 12, உத்திரபிரதேசத்தில் 8, மத்திய பிரதேசத்தில் 6, உத்தரகாண்ட், அஸ்ஸாம், மகாராஷ்டிரத்தில் 5, பீகாரில் 4, மேற்கு வங்கத்தில் 3, அருணாச்சலம், மணிப்பூர், மேகாலயா மாநிலங்களில் தலா 2, சத்தீஸ்கர், மிசோரம், நாகலாந்து, சிக்கிம், திரிபுரா, அந்தமான், ஜம்மு, லட்சத்தீவு மற்றும் புதுச்சேரியில் தலா ஒரு தொகுதியிலும் அந்த நாளில் வாக்குப்பதிவு நடைபெறும்.

பிற மாநிலங்களில் ஏழு கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடியும் தேதி ஜூன் 1 வரை நடைபெறும். எல்லா தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 அன்று தான்!

தமிழகத்தில் தேசிய கட்சியான காங்கிரஸ், தி.மு.க. கூட்டணியுடன் இருப்பதால் பிரதான கட்சியாக தெரியாமல் இருந்தாலும் தேசிய அளவில் தேசிய முற்போக்கு கூட்டணிக்கு வலுவான எதிர்க்கட்சியாக ‘இந்தியா’ கூட்டணி செயல்பட உதவியாக இருக்கிறது.

தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் தமிழகம் எங்கும் திமுக தலைவர்களுடன் கைகோர்த்து வாக்கு சேகரிக்க தயாராகி விட்டனர். தமிழகத்தில் ‘இந்திய’ கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகளும் இருக்கிறார்கள்.

சென்ற மாதம் 17–வது மக்களவை முடிவுக்கு வந்துவிட்டது. அதன் உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூன் 16 வரை மட்டுமே!

தற்போது தேர்தல் விதிமுறை நடைமுறைக்கு வந்து விட்டதால் அனைத்து மக்களவை உறுப்பினர்களும் காபந்து ஆட்சியின் அங்கமாக இருக்கிறார்கள்.

பிரதமர் அலுவலகமும் தேர்தல் விதிமுறைகளைக் கடைபிடித்து எந்த கட்டளைகளையும் பிறப்பிக்காது. அரசு அலுவலர்களுக்கும் தேர்தல் நடைபெற தேவையான அதிகாரங்கள், செலவுகளுக்கும் மட்டுமே உத்தரவு பிறப்பிக்க முடியும்.

தமிழகத்தில் முடிந்த அரசியல்வாதிகளும் பல முதல்முறை வேட்பாளர்களும் களத்தில் இருக்கிறார்கள்.

கட்சிக் கொள்கை அடிப்படையிலும் தனிப்பட்ட வேட்பாளரின் திறமையை ஆதரித்தும் என அவர்களது பலத்தை ஆராய்ந்து யாரேனும் ஒருவருக்கு வாக்களிக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது.

வாய்மைக்கும் கடமைக்கும் முன் உதாரணங்களாக இருந்த பல தலைவர்கள் இன்று நம்மிடம் இல்லையே என விரக்தியுடன் அரசியலை நோக்கும் வாக்காளர்கள் புரிந்து கொள்ள வேண்டியது– உதிர்ந்த பூ மீண்டும் பூத்துக் குலுங்காது; ஆனால் அவை உரமாக மாறி அடுத்த செடி வளர உதவும் ;அதிலிருந்து புதுப்புது பூக்கள் மலரும் என்று உணர்வோம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *