செய்திகள்

தமிழகத்தில் தனியார் பால், தயிர் விலை உயர்வு இன்று அமலுக்கு வந்தது

Makkal Kural Official

சென்னை, டிச. 5-

தமிழகத்தில் தனியார் பால் நிறுவனங்களின் பால் மற்றும் தயிர் பாக்கெட் விலை உயர்வு இன்றுமுதல் அமலுக்கு வந்துள்ளது.

4 தனியார் பால் நிறுவனங்களும் மாநிலத்தின் மொத்த பால் சந்தை பங்கில் 45 சதவிகிதத்துக்கு மேல் வைத்துள்ள நிலையில், பால் விலை லிட்டருக்கு ரூ. 2 முதல் 4 வரையும், தயிர் மற்றும் மோரின் விலை லிட்டருக்கு ரூ. 4 முதல் 6 வரையும் உயர்த்தியுள்ளன. ஆனால் பால் கொள்முதல் விலையை எந்த நிறுவனமும் உயர்த்தவில்லை.

திருமலை நிறுவனத்தின் பால் லிட்டருக்கு ரூ. 58-ல் இருந்து ரூ. 62 ஆகவும், முழு க்ரீம் பால் லிட்டருக்கு ரூ. 66-ல் இருந்து ரூ. 70 ஆகவும் உயர்ந்துள்ளது. இதே நிறுவனத்தின் 450 கிராம் தயிர் ரூ. 4 உயர்த்தப்பட்டு ரூ. 36 ஆகவும், 200 மி.லி. மோர் பாக்கெட் ரூ. 4 உயர்த்தப்பட்டு ரூ. 10 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

ஹெரிடேஜ் நிறுவனத்தின் 457 மி.லி. பால் ரூ. 31 லிருந்து ரூ. 33 ஆகவும், 950 மில்லி பால் ரூ. 62-ல் இருந்து ரூ. 64 ஆகவு உயர்த்தப்பட்டுள்ளது..

டோட்லா நிறுவனத்தின் முழு க்ரீம் பால் லிட்டருக்கு ரூ. 2 உயர்த்தி ரூ. 70 ஆகவும், சாதாரண தரப்படுத்தப்பட்ட பால் லிட்டருக்கு ரூ. 2 உயர்த்தி 62 ஆக விற்கப்படுகிறது.

ஸ்ரீரங்கம் பால் நிறுவனம் தரப்படுத்தப்பட்ட பால் விலையை லிட்டருக்கு ரூ. 5, முழு க்ரீம் பால் விலையை லிட்டருக்கு ரூ. 4 உயர்த்தியுள்ளது.

தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்கள் பென்ஜல் புயலால் பாதிக்கப்பட்டு இன்னும் மீளாத சூழலில், அத்தியாவசியப் பொருள்களான பால், தயிர் விலையை தனியார் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *