சென்னை, நவ.8–
தமிழகத்தில் இன்று முதல் தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.2 வரை உயர்ந்துள்ளது. இந்த திடீர் விலை உயர்வால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் ஆவின் பால் மட்டுமின்றி பல தனியார் நிறுவனங்களின் பால் பாக்கெட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தனியார் நிறுவனங்கள் சுமார் 1.50 கோடி லிட்டர் பால் பாக்கெட்டுகளை விற்பனை செய்து வருகின்றன. ஆவின் பாலை விட தனியார் நிறுவன பால் விலை அதிகமாக உள்ளது.
இந்த நிலையில் தனியார் பால் விற்பனை விலை இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆவின் பாலுக்கு அடுத்து அதிக அளவில் விற்பனையாகும் தனியார் பால் நிறுவனமான ஆரோக்யா பால் நிறுவனம் இன்று முதல் லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியுள்ளது.
இதையடுத்து ஒரு லிட்டர் ரூ.65-க்கு விற்பனையாகி வந்த ஆரோக்யா பால் இன்று முதல் ரூ.67-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த திடீர் விலை உயர்வால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அடிக்கடி தன்னிச்சையாக தனியார் நிறுவனங்கள் பால் விலையை உயர்த்துவதை வரைமுறைப்படுத்த பாலுக்கான விலையை அரசே நிர்ணயம் செய்யும் வகையில் பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலை ஒழுங்கு முறை ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் பல முறை அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்து குறிப்பிடத்தக்கது.