செய்திகள்

தமிழகத்தில் ‘டெல்டா பிளஸ்’ கொரோனா: அமைச்சர் சுப்பிரமணியன்

சென்னை, ஜூன்.24–
தமிழகத்தில் ‘டெல்டா பிளஸ்’ கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பெண் குணமடைந்து, அவர் நலமுடன் உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டு பரவிய கொரோனாவின் முதல் அலையிலிருந்து நாடு மீண்டு வந்த நிலையில், கடந்த மே மாதம் முதல் வாரத்தில் கொரோனா 2வது அலை தொடங்கியது. இது வேகமாகப் பரவி வந்த நிலையில், தற்போது அதன் தாக்கம் குறைந்து வருகிறது. ஆனால் இன்னும் முழுமையாக அதிலிருந்து மீள்வதற்கு பெரும் போராட்டமாகவே உள்ளது.

இந்நிலையில், இன்னும் 6 முதல் 8 வாரங்களில் கொரோனாவின் மூன்றாம் அலை தொடங்கும் என டெல்லி எய்ம்ஸ் தலைமை மருத்துவர் டாக்டர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். இதையடுத்து, கொரோனாவின் மூன்றாம் அலையைச் சமாளிக்கத் தயாராக உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

டெல்டா பிளஸ் கொரோனா

முதலில் இந்தியாவில் கண்டறியப்பட்ட ‘பி.1.617.1’ வைரசுக்கு காப்பா என்றும் ‘பி.1.617.2’ வைரசுக்கு டெல்டா என்றும் உலக சுகாதார நிறுவனத்தால் பெயர் சூட்டப்பட்டது. இந்த டெல்டா வைரஸ்தான் இந்தியாவில் கொரோனாவின் 2வது அலைக்கு முக்கியக் காரணமாக அமைந்தது என்று சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், இந்த டெல்டா வைரஸ் உருமாறி உள்ளது. உருமாறிய டெல்டா வைரஸ், ‘டெல்டா பிளஸ்’ என்று அழைக்கப்படுகிறது. இந்தப் புதிய உருமாறிய வைரஸ், கொரோனா வைரசின் ஸ்பைக் புரதத்தில் ‘கே417என்’ பிறழ்வால் வகைப்படுத்தப்படுகிறது.

அறிகுறிகள்

இந்த டெல்டா பிளஸ் தொற்று ஏற்பட்டால் வழக்கமான கொரோனா அறிகுறிகளே காணப்படும். மேலும் அதோடு வயிற்று வலி, குமட்டல், பசியின்மை, வாந்தி, மூட்டு வலி, செவி திறன் குறைபாடு போன்றவையும் ஏற்பட வாய்ப்புள்ளது.

இதில் டெல்டா மட்டுமின்றி, பீடா உள்ளிட்ட வேறு சில மரபு திரிந்த கொரோனாவின் அடையாளங்களும் உள்ளதால், அதிக பரவும் தன்மையுடன், கவலைக்குரிய தொற்று வகையாக டெல்டா ப்ளஸ் காணப்படுகிறது.

தமிழகத்தில் டெல்டா பிளஸ் கொரோனா

இந்த டெல்டா பிளஸ் தொற்று (ஏ.ஒய்.1) அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் மராட்டியம், கேரளா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சுமார் 40 பேர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். டெல்டா பிளஸ் கொரோனா பாதித்த சென்னையைச் சேர்ந்த அந்தப் பெண் குணமடைந்து விட்டார் எனவும் அவர் நலமுடன் இருக்கிறார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *