செய்திகள்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை நெருங்கியது: 1 லட்சத்து 43 ஆயிரம் பேர் குணம் அடைந்து டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை நெருங்கியது

1 லட்சத்து 43 ஆயிரம் பேர் குணம் அடைந்து டிஸ்சார்ஜ்

இதுவரை 21 லட்சத்து 38 ஆயிரம் பேருக்கு பரிசோதனை

சென்னை, ஜூலை 25–

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கியது. நேற்று புதிதாக 6,785 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதுவரை 1 லட்சத்து 43 ஆயிரத்து 297 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் 63 ஆயிரத்து 182 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 4,137 ஆண்கள், 2,648 பெண்கள் என 6,785 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். வெளிநாடுகளில் இருந்து வந்த 18 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 38 பேரும் இதில் அடங்குவர்.

அதிகபட்சமாக சென்னையில் 1,299 பேரும், விருதுநகரில் 424 பேரும், செங்கல்பட்டில் 419 பேரும், குறைந்தபட்சமாக திருப்பூரில் 18 பேரும், கரூரில் 5 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 21 லட்சத்து 38 ஆயிரத்து 704 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் ஒரு லட்சத்து 99 ஆயிரத்து 749 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 1 லட்சத்து 21 ஆயிரத்து 389 ஆண்களும், 78 ஆயிரத்து 337 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 23 பேரும் அடங்குவர். இந்த பட்டியலில் 12 வயதுக்கு உடட்ட 10 ஆயிரத்து 6 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 24 ஆயிரத்து 748 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 66 பேரும், தனியார் மருத்துவமனையில் 22 பேரும் என 88 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து 6 ஆயிரத்து 504 பேர் நேற்று குணம் அடைந்தனர். இதுவரை சென்னையில் 76,494 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 43 ஆயிரத்து 297 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 53 ஆயிரத்து 132 பேர் உள்ளனர்.

114 அரசு மற்றும் தனியார் ஆய்வகங்கள் மூலம் இதுவரை 22 லட்சத்து 23,019 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

அதிகபட்சமாக சென்னையில் 92,206 பேரும் செங்கல்பட்டில் 11,308 பேரும் திருவள்ளூரில் 11,008 பேரும் மதுரையில் 9,302 பேரும் காஞ்சிபுரத்தில் 6,361 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சென்னையில் 76,494 பேர் டிஸ்சார்ஜ்

தமிழகத்திலேயே சென்னையில் தான் அதிக அளவு கொரோனா பாதிப்பு பரவியது. சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த அரசு எடுத்த அதிரடி நடவடிக்கைகளால் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகின்றன.

சென்னையில் கொரோனா பாதித்த 92 ஆயிரத்து 206 பேரில் 76 ஆயிரத்து 494 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். 13 ஆயிரத்து 743 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 1,969 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் 2,189 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அண்ணா நகரில் 1756 பேரும், திரு.வி.க. நகரில் 1221 பேரும், அடையாறில் 1155 பேரும், தேனாம்பேட்டையில் 1136 பேரும் சிகிச்சையில் உள்ளனர்.

அம்பத்தூரில் 996 பேரும், வளசரவாக்கத்தில் 846 பேரும், ராயபுரத்தில் 817 பேரும், தண்டையார்பேட்டையில் 591 பேரும், ஆலந்தூரில் 536 பேரும், பெருங்குடியில் 417 பேரும், திருவொற்றியூரில் 413 பேரும், மாதவரத்தில் 407 பேரும், சோழிங்கநல்லூரில் 309 பேரும், மணலியில் 196 பேரும் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *