சென்னை, பிப்.21-
தமிழகத்தில் 4 ஆயிரத்து 120 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் நேற்று 256 ஆண்கள், 182 பெண்கள் என மொத்தம் 438 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 139 பேரும், கோவையில் 47 பேரும், செங்கல்பட்டில் 41 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரம்பலூர், கரூர், விழுப்புரத்தில் நேற்று புதிதாக பாதிப்பு இல்லை. தமிழகத்தில் இதுவரை 8 லட்சத்து 47 ஆயிரத்து 823 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தமிழகத்துக்கு இங்கிலாந்தில் இருந்து வந்த பயணிகளில் இதுவரை 56 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 8 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.
கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 5 பேரும், தனியார் மருத்துவமனையில் ஒருவரும் என 6 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். இதுவரையில் 12,457 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பில் இருந்து 459 பேர் நேற்று குணமடைந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர். தற்போது தமிழகத்தில் 4 ஆயிரத்து 120 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை ஒரு கோடியே 67 லட்சத்து 55 ஆயிரத்து 951 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. நேற்று ஒரே நாளில் 50 ஆயிரத்து 893 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நேற்று 645 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்தது. இதில் நேற்று ஒரே நாளில் மட்டும் 20 ஆயிரத்து 563 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். அந்த வகையில் 20 ஆயிரத்து 57 பேர் ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்தும், 506 பேர் ‘கோவேக்சின்’ தடுப்பு மருந்தும் போட்டுள்ளனர். அதில் 15 ஆயிரத்து 149 பேர் முதல் முறையாகவும், 5 ஆயிரத்து 414 பேர் 2-வது முறையாகவும் தடுப்பூசி போட்டுள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை 3 லட்சத்து 70 ஆயிரத்து 612 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இதில் 3 லட்சத்து 63 ஆயிரத்து 352 பேர் ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்தும், 7 ஆயிரத்து 260 பேர் ‘கோவேக்சின்’ தடுப்பு மருந்தும் போட்டுள்ளனர்.
மேலும், தமிழகத்தில் இதுவரை 3 லட்சத்து 39 ஆயிரத்து 631 பேர் முதல் முறையாகவும், 30 ஆயிரத்து 981 பேர் 2வது முறையாகவும் தடுப்பூசி போட்டுள்ளனர்.