போஸ்டர் செய்தி

தமிழகத்தில் கைது செய்யப்பட்ட 16 தீவிரவாதிகளின் வீடுகளில் அதிரடி சோதனை

சென்னை, ஜூலை 20

இலங்கை குண்டு வெடிப்பு தாக்குதலில் தொடர்புடைய 16 பேரின் வீடுகளில் இன்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21-ந்தேதி ஈஸ்டர் தினத்தன்று ஐ.எஸ். ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 259 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலுக்கு தலைமை பொறுப்பு ஏற்று நடத்திய ஜக்ராம் ஆசிமுடன் தமிழகத்தைச் சேர்ந்த பலர் தொடர்பில் இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து தேசிய புலனாய்வு அமைப்பு தீவிர விசாரணை நடத்தியது. அப்போது தமிழகத்திலும் மிகப் பெரிய தொடர் குண்டு வெடிப்புகளை நடத்த ஐ.எஸ். ஆதரவு பயங்கரவாதிகள் திட்டமிட்டு இருப்பது தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் பேன் இந்தியா ஆபரே‌ஷன் என்ற திட்டத்தை தொடங்கி உள்ளனர். அதன்படி ஐ.எஸ். ஆதரவாளர்களை வேட்டையாடும் அதிரடி வேலை தொடங்கி உள்ளது.

அதன் முதல் கட்டமாக கடந்த சனிக்கிழமை சென்னை, நாகப்பட்டினத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி அசன்அலி, முகமது யூசுப் ஆகிய 2 பேரை கைது செய்தனர். இந்த நிலையில் துபாயில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 14 ஐ.எஸ். ஆதரவாளர்கள் நாசவேலை சதி திட்டத்துக்கு நிதி திரட்டியது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களும் கைது செய்யப்பட்டனர்.

கைதான 16 பேரும் சென்னை பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் இந்த 16 பேரும் “அன்சருல்லா” என்ற புதிய அமைப்பை தொடங்கி நடத்த முயன்றதும் அதற்காக ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் மற்றும் அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு கொண்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று 16 பேரின் வீடுகளிலும் தேசிய புலனாய்வு அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சென்னை, மதுரை, தேனி, மேலபாளையம், முத்துப்பேட்டை, ராமநாதபுரம் உள்பட பல்வேறு இடங்களில் இந்த சோதனை நடந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *