சென்னை, டிச.1–
தமிழக – புதுவை கடலோரப் பகுதிகளில் 8–ந்தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்புள்ளதாகவும், தமிழகத்தில் 5 நாட்கள் மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் 5–ந்தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வலுவடையக்கூடும். பிறகு மேலும் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து 8–ந்தேதி தமிழக – புதுவை கடலோரப் பகுதிகளின் அருளில் நிலவக்கூடும்.
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது.
புதுவை, காரைக்கால், உள் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
4–ந்தேதி மற்றும் 5–ந்தேதி அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கடந்த 24 மணி நேரத்தில் கோடியக்கரை – 8 செ.மீ., வேதாரண்யம் – 5 செ.மீ., சிதம்பரம், ஆலங்குடி, மதுக்கூர், மகாபலிபுரம், வம்பன் தலா 3 செ.மீ., தரங்கம்பாடி, புதுக்கோட்டை, சீர்காழி, பட்டுக்கோட்டை, பாடலூர், மலையூர், மணல்மேடு தலா 2 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.