செய்திகள்

தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு ரூ.38 ஆயிரம் கோடி நிவாரணம் வேண்டும்

அமித்ஷாவிடம் தமிழக எம்.பி.க்கள் வற்புறுத்தல்

புதுடெல்லி, ஜன.14-

தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு ரூ.37 ஆயிரத்து 907 கோடி நிவாரணத்தொகை வழங்க வேண்டும் என தமிழக எம்.பி.க்கள் குழு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் நேற்று கோரிக்கை மனு அளித்தது. 27-ந்தேதிக்குள் வழங்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கடந்த மாதம் ஏற்பட்ட ‘மிக்ஜாம்’ புயல் மற்றும் தென் மாவட்டங்களில் பெய்த கனமழை யால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன. இந்த பாதிப்புகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக அரசு ஏற்கனவே கோரிக்கை விடுத்தது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டெல்லி சென்ற போது பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வலியுறுத்தினார். அப்போது ரூ.37 ஆயிரம் கோடி நிதிக்கான கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த நிலையில் தி.மு.க. தலைமை யிலான அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் குழு அமித்ஷாவை நேரில் சந்தித்து, நிவாரண உதவியை உடனே வழங்குமாறு வலியுறுத்துவார்கள் என்று முதலமைச்சர் ஏற்கனவே தெரிவித்து இருந்தனர்.

இதன்படி டெல்லியில் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து தமிழக எம்.பி.க்கள் கோரிக்கையை வலியுறுத்தியது. தி.மு.க. பொருளாளரும், நாடாளுமன்ற தி.மு.க. குழு தலைவருமான டி.ஆர்.பாலு தலைமையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலைச்சிறுத்தைகள் கட்சி எம்.பி. ரவிக்குமார், மார்க்சிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசன், கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. சுப்பராயன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.பி. நவாஸ்கனி, கொங்கு மக்கள் கட்சி எம்.பி. சின்ராஜ் உள்ளிட்டோர் இந்த குழுவில் இருந்தனர். இவர்களுடன் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயனும் சென்றார்.

இவர்கள் மதியம் 3.30 மணி அளவில் அமித்ஷா இல்லத்தில் அவரை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.

அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-–

மிக்ஜாம் புயல் பாதிப்புக்கு தற்காலிக நிவாரணமாக ரூ.7,033.45 கோடி, நிரந்தர நிவாரணமாக ரூ.12,659.24 கோடி என மொத்தம் ரூ.19,692.69 கோடியும், தென்மாவட்ட மழை வெள்ள பாதிப்புக்கு தற்காலிக நிவாரணமாக ரூ.8,612.14 கோடி, நிரந்தர நிவாரணமாக ரூ.9,602.38 கோடி என மொத்தம் ரூ.18,214.52 கோடியும் கேட்கப்பட்டது. ஆக மொத்தம் ரூ.37 ஆயிரத்து 907.21 கோடி மத்திய அரசிடம் தமிழக அரசு சார்பில் கோரப்பட்டு உள்ளது.

இதற்கிடையே டிசம்பர் 12 மற்றும் 13-ந்தேதிகளில் வடமாவட்டங்களுக்கும், 20 மற்றும் 21-ந்தேதிகளில் தென் மாவட்டங்களுக்கும் மத்தியக்குழு வந்தது. மீண்டும் வருகை தருகிறது என்பதையும் உங்கள் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறோம்.

இருந்தாலும் மாநில அரசு உடனடி மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மாநில பேரிடர் நிவாரண நிதி உதவியுடன் செய்தது. ஆனால் இயற்கை பேரழிவின் அளவு மிகப்பெரியது. தேசிய பேரிடர் நிதியின் போதுமான மற்றும் உறுதியற்ற ஆதரவு இல்லாமல், முழு மறுசீரமைப்பு மற்றும் மறுவாழ்வு பணிகளை செய்ய முடியாது.

இந்த இரட்டை பேரழிவுகள் நடந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் கடந்து விட்டது. பாதிக்கப்பட்ட பகுதிகள் பேரழிவில் இருந்து மீள போராடி வருகின்றன.

எனவே, தமிழ்நாடு அரசு சமர்ப்பித்துள்ள குறிப்பாணையின் மீது உடனடி நடவடிக்கை எடுத்து, முன்னெப்போதும் இல்லாத 2 இயற்கை பேரிடர்களுக்காக தமிழக அரசு கோரிய நிதியை இனியும் தாமதிக்காமல் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது.

மனு அளித்ததை தொடர்ந்து எம்.பி.க்கள் குழு டி.ஆர்.பாலு எம்.பி. இல்லத்துக்கு வந்தனர். அங்கு டி.ஆர்.பாலு நிருபர்களிடம் கூறியதாவது:-

நாங்கள் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் கோரிக்கை வைத்திருக்கிறோம். தமிழ்நாடு அரசு கேட்ட அதே தொகையை தருமாறு வலியுறுத்தினோம். மிக விரைவாக தருவதாக அவர் சொல்லியிருக்கிறார். “ஆய்வு செய்ய சென்றிருக்கும் மத்தியக்குழு வருகிற 21-ந்தேதிக்குள் அறிக்கை அளித்து விடும், அதன்பிறகு உள்துறை, வேளாண்துறை மற்றும் நிதித்துறை ஆகியவை கலந்து பேசி எவ்வளவு நிதி வழங்கலாம்? என ஆலோசித்து நல்ல முடிவு எடுப்போம்.

27-ந்தேதிக்குள் தந்து விடுவோம்” என்று அவர் கூறியிருக்கிறார். எவ்வளவு தர முடியுமோ? அதை கொடுத்து விடுவதாக வாக்குறுதி அளித்து இருக்கிறார்.

தமிழ்நாட்டின் கோரிக்கையை அவர் புறக்கணிக்க வேண்டிய அவசியம் கிடையாது. புறக்கணிப்பதாக இருந்தால் மத்திய அமைச்சர்கள், குழுக்கள் என இத்தனை பேர் வந்து பாதிப்புகளை பார்த்திருக்க மாட்டார்கள். மத்திய அரசு இந்த விஷயத்தை கரிசனத்தோடு அணுகுவதாக நாங்கள் பார்க்கிறோம்.

ஓரவஞ்சனை என்றெல்லாம் சொல்ல முடியாது. இதில் முடிவை பார்த்துவிட்டு பேசலாம். எதிர்பார்த்தபடி மத்திய அரசு உதவும் என நாங்கள் நம்புகிறோம். இந்த சந்திப்பு மிகவும் நிறைவாக இருந்தது.

இந்த விஷயத்தில் முன்பு நிர்மலா சீதாராமன் பேசியதற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு சரியான பதிலடி கொடுத்தார். நிர்மலா சீதாராமனின் பேச்சில் அரசியல் கலப்பு இருந்ததால் தேவையான பதில் தரப்பட்டது. அது அதோடு முடிந்தது. அதன்பிறகுதான் நிர்மலா சீதாராமனை பிரதமர் தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைத்தார் என்பதை உணர வேண்டும்.

மத்திய அரசு இதில் முடிவு எடுக்க சில நடைமுறைகள் உள்ளன. எனவே, இதில் அரசியல் ரீதியாக பதில் சொல்ல முடியாது.

இவ்வாறு டி.ஆர்.பாலு கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *