தலைமை தேர்தல் கமிஷனரிடம் அண்ணா தி.மு.க. புகார்
சென்னை, ஏப். 14–-
தமிழகத்தில் எதிர்க்கட்சி தலைவர்களின் போன் ஒட்டு கேட்கப்படுகிறது என்று தலைமை தேர்தல் கமிஷனரிடம் அண்ணா தி.மு.க. சார்பில் புகார் மனு அனுப்பப்ட்டுள்ளது.
இந்திய தலைமை தேர்தல் கமிஷனர், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆகியோருக்கு அண்ணா தி.மு.க. வக்கீல் பிரிவு தலைவர் இன்பதுரை அனுப்பிய மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
எங்களுக்கு போலீஸ் மற்றும் அரசு வட்டாரங்களில் இருந்து கிடைத்த தகவலின்படி, ஐ.ஜி. செந்தில்வேலன் தலைமையில் செயல்படும் தமிழக நுண்ணறிவு பிரிவு, இங்குள்ள எதிர்க்கட்சி தலைவர்களை குறி வைத்து, அவர்களின் போன்களை ஒட்டு கேட்பதையும், இஸ்ரேல் நாடு தயாரித்து அளித்துள்ள சாப்ட்வேரை வைத்து ‘ஹேக்’ செய்யும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளது. இந்த புதிய சாப்ட்வேர் மூலம் 92 நாடுகளில் ஐபோன் பயன்படுத்துவோரை அணுகியுள்ளதாக சர்வதேச அளவில் செய்திகள் வெளியாகியுள்ளன. அதில், இந்தியாவில் பெகாசஸ் என்ற சாப்ட்வேர், குறிப்பிட்ட சிலரை இலக்கு வைத்து பயன்படுத்தப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
தற்போது நடக்க உள்ள தேர்தலை முன்னிட்டு எதிர்க்கட்சி தலைவர்களின் போனை இடைமறித்து ஒட்டு கேட்பதற்காக, தமிழக நுண்ணறிவு பிரிவு அதை பயன்படுத்துகிறது. இதற்காக அந்த சாப்ட்வேர் ரூ.40 கோடி கொடுத்து வாங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் எங்கள் கட்சியின் மூத்த தலைவர்கள், அவர்களின் தனிப்பட்ட உதவியாளர்கள், டிரைவர்களின் செல்போன்கள் கண்காணிக்கப்படுகின்றன. அதில் பெறும் தகவல்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எங்களின் தேர்தல் நடவடிக்கைகளை செந்தில்வேலன் தினமும் கொடுத்து வருகிறார். இது நேர்மையற்ற செயல்பாடாகும். இது தேர்தல் நியாயமாக நடைபெறுவதை பாதிக்கும். அடுத்தவர்களின் போன் பேச்சை பதிவு செய்வது, அவர்களின் தனிப்பட்ட உரிமை, பேச்சுரிமை போன்றவற்றை பாதிக்கும் குற்றமாகும்.
எனவே, தமிழகத்தில் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் தேர்தல் நடப்பதற்கு ஏற்ற வகையில் அதிகாரி ஐ.ஜி. செந்தில்வேலன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.