செய்திகள்

தமிழகத்தில் உற்பத்தியாகும் பாலை முழுமையாக கொள்முதல் செய்ய வியூகம்

Makkal Kural Official

அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்

சென்னை, ஜூலை 6-

தமிழகத்தில் உற்பத்தியாகும் பாலை முழுமையாக கொள்முதல் செய்ய வியூகம் அமைத்து வருவதாக அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.

சென்னை தலைமைச்செயலகத்தில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று அளித்த பேட்டி வருமாறு:-

தமிழகத்தில் 2.25 கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. அதில் 50 சதவீதம் உள்ளூர் பயன்பாட்டுக்கு செல்கிறது. மீதம் உள்ள 50 சதவீதத்தில் தற்போது 36 லட்சம் லிட்டர் பாலை ஆவின் கொள்முதல் செய்கிறது.

தமிழகத்தில் பசுக்கள் ஒரு நாளில் 5 முதல் 6 லிட்டர் அளவில் பால் கொடுக்கின்றன. ஐரோப்பிய நாடுகளில் மாடுகள் நாளொன்றுக்கு 34 லிட்டர் பால் கறக்கின்றன. பால் உற்பத்தி அளவை இரண்டரை கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்க வேண்டியதுள்ளது.

தமிழகத்தில் 10 ஆயிரம் புதிய கால்நடை பண்ணைகள் அமைக்க கடனுதவி வழங்கப்படுகிறது. அதன் மூலம் பால் உற்பத்தி அதிகரித்து உலகச்சந்தையிலும் நமது பாலை விற்க முடியும். பாலை ஆவினுக்கே விவசாயிகள் வழங்க வேண்டும். பால் உற்பத்தியாளர்களுக்கு உரிய விலை கொடுக்க அரசு தயாராக உள்ளது.

ஆனால் தனியார் நிறுவனங்கள், அந்தந்த காலநிலைக்கு ஏற்றபடிதான் விலை கொடுப்பார்கள். நிரந்தரமான விலையை தர மாட்டார்கள். ஆவின் மூலம் நிரந்தரமாக ஒரே விலையில் பால் கொள்முதல் செய்கிறோம்.

அமுல் போன்ற பல நிறுவனங்கள் உள்ளே வர உலக மயமாக்கலே காரணம். நாம் எந்த இடத்திலும் கோட்டை விட்டதால் அவர்கள் உள்ளே வரவில்லை. ஆவின் லாப நோக்கில் செயல்படவில்லை. மற்ற தனியார் நிறுவனங்களுடன் போட்டியிடுவதில் இருந்த சிரமங்கள் கண்டறிந்து களையப்பட்டுள்ளன. அமுலினால் ஆவினுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

தமிழகத்தில் உற்பத்தியாகும் அனைத்து பாலையும் ஆவின் நிறுவனமே கொள்முதல் செய்ய வியூகம் வகுத்து வருகிறோம். தனியாருக்கு வழங்குவதை விட ஆவினுக்கு பால் வழங்குவதே உகந்தது என்ற நிலையை உருவாக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்தத் துறைக்கு நான் அமைச்சரானபோது பால் கொள்முதல் 26 லட்சம் லிட்டராக இருந்தது. இப்போது 36 லட்சம் லிட்டராக உயர்ந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *